756 ஹெக்டயர் திருமலை துறைமுக காணி மக்களிடம்

திருகோணமலை துறைமுகத்திற்கு சொந்தமான 1975 ஹெக்டயர் காணியில் தற்போது மக்கள் தங்கியிருக்கும் சுமார் 756 ஹெக்டயர் காணியை அவர்களுக்கு வழங்கி வைக்க முடிவு செய்துள்ளதாக கப்பல்துறை, துறைமுக அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
 
திருகோணமலை துறைமுகத்திற்கு சொந்தமான காணியில் மக்கள் தங்கியிருப்பது தொடர்பில் திருகோணமலை அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
இக்கலந்துரையாடலில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான இம்ரான் மஹ்ரூப், கே. துரைரத்னசிங்கம், எம்.எஸ். தெளபீக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
[[{"type":"media","view_mode":"media_original","fid":"11076","attributes":{"alt":"","class":"media-image","height":"463","typeof":"foaf:Image","width":"673"}}]]
 
குறித்த காணியை விடுவிப்பதன் மூலம், அங்கு வாழும் சுமார் 4,441 குடும்பங்களுக்கு காணிகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் என, மாகாண காணி ஆணையாளர் எச்.ஈ.எம்.டப்.ஜி. திசாநாயக்க தெரிவித்தார்.
 
இதன்போது, எதிர்காலத்தில் திருகோணமலை அபிவிருத்தி திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவித்த அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, மக்களுக்கு கையளிக்கப்பட்ட பின்னர் எஞ்சும் குறித்த காணிகள் அதற்கு அவசியம் என தெரிவித்தார்.
 
எஞ்சிய காணிகளை முதலீட்டாளர்களின் தேவைக்காக பயன்படுத்தவுள்ளோம். அத்துடன், தற்போது துறைமுகத்திற்கு சொந்தமான வயல் நிலங்களை பயன்படுத்துவோருக்கு அதனை செய்கை செய்வதற்கான உரிமையை மாத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அவ்வயல் நிலங்களை மீண்டும் கையளிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
 
இதன்போது கருத்துத் தெரிவித்த மாகாண காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி, குறித்த காணிகளை நியாயமான முறையில் பகிர்ந்தளிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் எனவும், குறித்த காணிகளை வர்த்தமானிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
 
குறித்த அனைத்து காணிகளும், 1984 செப்டெம்பர் 12 ஆம் திகதி 314/10 எனும் வர்த்தமானியின் மூலம் துறைமுகத்திற்கு சொந்தமானவை என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு குடியேறியவர்களை அகற்றுவதற்கு அவசியமான நீதிமன்ற அதிகாரத்தை பிரதேச செயலாளரால் பெற்றுக்கொள்ள முடியும் என, திருகோணமலை அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ. புஷ்பகுமார சுட்டிக்காட்டினார்.

Add new comment

Or log in with...