யாழ். நெடுந்தீவில் 3 பெண்கள் உள்ளிட்ட ஐவர் படுகொலை

- பெண் ஒருவர் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்
- குற்றவாளிகள் தப்பிச் செல்லாது படகு சேவை நிறுத்தம்

- குற்றவாளிகளை உடன் கைது செய்யுமாறு அமைச்சர் டக்ளஸ் பணிப்பு

யாழ்.நெடுந்தீவு பகுதியில் நேற்று அதிகாலை இரண்டு ஆண்களும் மூன்று பெண்களும் ஒரே வீட்டில் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

100 வயதான கனகம் பூரணம் எனும் மூதாட்டி பலத்த வெட்டு காயங்களுடன் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொர்பில் உடனடியாக வட மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபருடன் தொடர்பு கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

நெடுந்தீவு பகுதியில் சந்தேகத்துக்கிடமான நடமாட்டங்கள் தொடர்பாகவும், நேற்று நெடுந்தீவை விட்டு வெளியேறியவர்கள் தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு ஆலோசனை வழங்கியதுடன், இக்கொலைகள் தொடர்பான உண்மைகள் கண்டறியப்பட்டு, மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான அச்சத்தை விரைவில் களைய வேண்டிய அவசியத்தையும் அமைச்சர் டகளஸ் வலியுறுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ். நெடுந்தீவு, மாவளி இறங்கு துறைக்கு அருகிலுள்ள வீட்டில் வசிக்கும் மூதாட்டியொருவர் நெடுந்தீவுக்கு செல்வோருக்கு தங்குமிட வசதிகளை வழங்குதல்,உணவு வழங்குதல் போன்றவற்றை தொழிலாக செய்து வந்துள்ளார்.

இவரது கணவர் 1986ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட பின்னர் மூதாட்டி தனது வாழ்வாதாரத்தை தானே கொண்டு நடத்தி வந்துள்ளார்.

நெடுந்தீவிலுள்ள ஆலயமொன்றில் நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருந்த மகா கும்பாபிஷேகத்துக்கு யாழ்ப்பாணம் , முல்லைத்தீவு மற்றும் புலம்பெயர் நாடொன்றிலிருந்து வந்திருந்த ஐவர் வெள்ளிக்கிழமை நெடுந்தீவு சென்று இறங்குதுறைக்கு அருகிலுள்ள மூதாட்டியின் வீட்டில் தங்கியுள்ளனர்.

நேற்றுக் காலை சனிக்கிழமை காலை வீட்டிலிருந்து எவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அயலவர்கள் வீட்டுக்குச் சென்று பார்த்த போது வெட்டு காயங்களுடன் சடலங்களாக இவர்கள் காணப்பட்டுள்ளனர்.

ஒருவர் வீட்டின் வெளியேயும் ஏனையவர்கள் வீட்டின் உள்ளே படுக்கை மற்றும் ஏனைய இடங்களிலும் கொடூரமான வெட்டுக் காயங்களுடன் சடலங்களாக காணப்பட்டுள்ளனர்.

அதில் ஒருவர் படுகாயங்களுடன் காணப்பட்டதுடன் அவரை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்தனர்.

சம்பவம் தொடர்பில் நெடுந்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து பொலிஸ் குழு நெடுந்தீவு சென்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாள்கள் போன்ற கூரிய ஆயுதங்களால் தாக்கியே கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

அதேவேளை வீட்டிலிருந்த ஐவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும், ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாலும் , வீட்டில் இருந்த பொருட்கள் எவையேனும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளனவா ? என்பதனை அறிய முடியவில்லையெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

படகு சேவைகள் இடைநிறுத்தம்
நெடுதீவிலிருந்து குற்றவாளிகள் தப்பி செல்லாதவாறு நெடுந்தீவு - குறிகாட்டுவான் இடையிலான படகு சேவைகள் மறு அறிவித்தல் வரை இடை நிறுத்தப்பட்டுள்ளது.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் நெடுந்தீவுக்கு நேரில் சென்று சம்பவ இடத்தை பார்த்து விசாரணைகளை முன்னெடுத்தார்.

அதேவேளை யாழ்ப்பாண தடயவியல் பொலிஸ் குழுவும் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட, யாழ். குறூப் நிருபர்கள்


Add new comment

Or log in with...