தாந்தாமலைக் காட்டில் வாழ்ந்த முன்னாள் LTTE உறுப்பினர் பாலா மீட்பு

மட்டக்களப்பு, பட்டிப்பளை பிரதேசத்துக்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப்பகுதியிலிருந்து புலிகள் உறுப்பினர் ஒருவர் நேற்று முன்தினம் புதன்கிழமை (08) மீட்கப்பட்டு  வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த நா. நகுலேஸ் தெரிவித்தார்.

கடந்த 04 வருடங்களாக குடும்பத்தினரால் கைவிடப்பட்ட முன்னாள் போராளியான மனநலம் குன்றிய பாலா எனும் இந்த நபர், தாந்தாமலைப் பகுதியில் அமைந்துள்ள றெட்பாணா எனும் கிராமத்துக்கு அப்பாலுள்ள காட்டுப்பகுதியில் கொட்டகை யொன்றில் வசித்து வந்துள்ளார்.

இவர் தொடர்பான தகவல்களை அறிந்துகொண்ட ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், அவரை அணுகியபோது திடீரென ஓடி காட்டுப்பகுதிக்குள் மறைந்து விடுவார். இவரை இரவு, பகலாக அவதானித்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், அவரது உறவினர்களினதும் அப்பகுதி கிராம அலுவலகரினதும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரினதும் உதவியுடன் அம்பியூலன்ஸ் வண்டி மூலம் இவரை சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுவரைகாலமும் காட்டிலுள்ள பழங்களை உட்கொண்டு, குளிக்காமல், முடி வெட்டாமல், சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார். இவருக்கு புதிய ஆடைகளை அணிவித்து வைத்தியசாலையிலிருந்து அவரைக் கவனிப்பதாகவும், ஜனநாயக போராளிகள் கட்சியைச் சேர்ந்த நா. நகுலேஸ் தெரிவித்தார்.

பெரியபோரதீவு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...