பிரித்தானியாவிலிருந்து நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட குழுவினர் நாடு திரும்பியுள்ளனர்.

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த சனிக்கிழமை (17) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றிருந்தனர்.

குறித்த நிகழ்விற்கான உத்தியோகபூர்வ அழைப்புக்கமைய, உத்தியோகபூர்வ குழுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன், ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர்  செண்ட்ரா பெரேரா, ஜனாதிபதியின் சர்வதேச உறவுகளுக்கான  பணிப்பாளர் தினுக் கொலம்பகே ஆகியோர் உத்தியோகபூர்வமாக உள்வாங்கப்பட்டிருந்ததோடு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வைத்தியரும்  அவருடன் சென்றிருந்தார்.

முதற்பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க தனது தனிப்பட்ட செலவில் இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

அதற்கமைய, இன்று (21) முற்பகல் 8.23 மணிக்கு துபாயிலிருந்து வந்த EK 650 எமிரேட்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான விமானத்தின் மூலம் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினர்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...