சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயற்சி; 47 பேர் கைது

- யாழ், வவுனியா, திருமலை, கல்முனை, மட்டு, புத்தளம், சிலாபம், வெள்ளவத்தை உள்ளிட்ட பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக சந்தேகிக்கப்படும் 47 பேர் கடற்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வென்னப்புவ நகரில் நேற்றிரவு (31) பொலிஸாருடன் இணைந்து இலங்கை கடற்படையினர் நடாத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு செல்ல முயன்றதாக சந்தேகிக்கப்படும் 47 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வென்னப்புவ பொலிசார் இணைந்து நேற்றிரவு மேற்கொண்ட இந்த விசேட தேடுதல் நடவடிக்கையில், சந்தேகத்திற்கிடமான 3 வேன்களை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சிப்பதாக சந்தேகிக்கப்படும் 18 வயதுக்கு மேற்பட்ட 37 ஆண்கள், 06 பெண்கள், 18 வயதுக்குட்பட்ட 04 பேர் உள்ளிட்ட குறித்த 03 வேன்களிலிருந்த 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, புத்தளம், சிலபாம், வெள்ளவத்தை, மாரவில, மஹவெவ, முந்தலம், ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக  வென்னப்புவ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

பணம் சம்பாதிப்பதற்காக கடத்தல்காரர்களால் மேற்கொள்ளப்படும் இவ்வாறான ஆட்கடத்தலில் சிக்கி, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக உயிரைப் பணயம் வைத்து வெளியேற முற்பட்டு சட்டத்தின் முன் குற்றவாளிகளாக ஆவதை விட்டும் தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.


Add new comment

Or log in with...