தடுப்பூசியை பெற வேண்டுமென அரசு மக்களை கட்டாயப்படுத்தாது

கொவிட் 19 தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை தன்னிச்சையாக நாட்டு மக்கள் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென அரசாங்கம் கட்டாயப்படுத்தாதென ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், கொவிட்19 தடுப்பூசி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பிரதானியுமான லலித் வீரதுங்க தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவுஸ்திரேலியாவில் இந்த தடுப்பூசி ஏற்றிக்கொள்வது அந்நாட்டு மக்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதா? என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

அவுஸ்திரேலியாவில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆனால் இலங்கையில் கட்டாயமில்லை. அவ்வாறே அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முதல் கட்டத்தின் கீழ் இந்த நோய்க்கு எதிராக களத்தில் பணியாற்றும் சுகாதார ஊழியர்கள் தடுப்பூசியை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நோயிலிருந்து பாதுகாத்துக்கொள்வது அவர்களது பொறுப்பாகும்.

தடுப்பூசி முற்று முழுதாக இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும். எந்தவித கட்டணமும் அறவிடப்படாது. தனியார் துறையினருக்கு தடுப்பூசியை விற்பனைக்காக வழங்குவது குறித்து இதுவரை அரசாங்கம் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை. இருப்பினும், சில நிறுவனம் தனிப்பட்ட முறையில் இதனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக்கூடும்.

தடுப்பு மருந்து பெற்றுக்கொள்வோர் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணைக்குழு தரவுகள் மூலமும், கிராம உத்தியோகத்தர் மூலமும் பெற்று தடுப்பு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைக்குழுவில் பெயர்கள் இடம்பெறாதவர்கள் தடுப்பூசி வழங்கப்படும் போது அது தொடர்பாக வெளியிடப்படும் விளம்பரத்தில் குறிப்பிடப்படும் படிவத்தை நிரப்பி சுகாதார பிரிவுக்கு சமர்பித்து தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...