சடலங்களை அடக்கம் செய்வது குறித்து மீண்டும் கம்மன்பில கருத்து

- குர்ஆனில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்கிறார் அமைச்சர்  

சடலங்களை அடக்கம் செய்வது கட்டாயமென குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லையென நான் முன்வைத்த கூற்றை இது வரை எந்த நிபுணத்துவ அறிவு உள்ளவரும் மறுக்கவில்லையென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.  

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.  

அல் குர்ஆனை பற்றி பாராளுமன்றத்தில் கூறிய கூற்றை எந்தளவு ஆய்வு செய்து முன்வைத்தீர்கள் என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.  

நான் குர்ஆனை நன்கு ஆராய்ந்துள்ளேன். அண்மையில் இருதடவைகள் ஆரம்பம் முதல் இறுதி வரை வாசித்தேன்.இறந்தவரை புதைப்பதை கட்டாயப்படுத்தி குர்ஆனில் எங்கும் கூறப்படவில்லை.எரிப்பது ஹராம் என தடைசெய்யப்படவுமில்லை. நான் குர்ஆன் பற்றி நிபுணத்துவ அறிவு உள்ளவனல்ல.நான் கூறியது தவறாக இருந்தால் அதனை திருத்துமாறு நிபுணத்துவ அறிவுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தேன் என்றார்.  

05ஆவது சரத்தின் 31ஆவது பிரிவில் உலகில் முதலாவது மரணமாக ஆதமின் இருபுதல்வர்கள் இடையில் நடந்த மோதலில் ஒரு புதல்வர் இறக்கிறார்.  

புதைப்பதை கட்டாயப்படுத்தி எந்த இடத்திலாவது குறிப்பிடப்பட்டிருந்தால் சுட்டிக்காட்டுமாறு கோரினேன்.இதுவரை எந்த நிபுணரும் முன்வரவில்லை. சிலர் குர்ஆனின் பகுதிகளை எனக்கு அனுப்பியிருந்தாலும் அவற்றில் புதைப்பது குறித்து இருந்தாலும் புதைப்பது கட்டாயமென கூறப்பவில்லை. எரிப்பது தடையென யாரும் நிரூபிக்கவில்லையென்றும் அவர் கூறினார்.  

அமைச்சர் விரும்பினால் அதனை நிரூபிக்க தயாரென அந்த ஊடகவியலாளர் கூறினார்.  

இதற்குப் பதிலளித்த அமைச்சர், நான் அரச ஊடகப் பேச்சாளராக இங்கு வந்துள்ளேன்.அரசின் உத்தியோகபூர்வ பேச்சாளராக அரசின் கருத்தையே இங்கு முன்வைக்கிறேன்.எனது கட்சி அலுவலகத்தில் அல்லது அமைச்சில் நடத்தும் ஊடக மாநாட்டில் இது பற்றி பேசுவோம் என்றார். 

ஷம்ஸ் பாஹிம்  


Add new comment

Or log in with...