வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு

வடக்கு, கிழக்கில் நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு-Jaffna University Mullivaikkal Monument Destruction

- நினைவுத்தூபி அகற்றம்; பல்கலை தீர்மானமே
- எமக்கு எவ்வித தொடர்புமில்லை: இராணுவத் தளபதி
- வடக்கு - தெற்கு ஐக்கியத்திற்கு தடை: பல்கலை மானிய தலைவர்
- சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது: துணைவேந்தர்

யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி மின்குமிழ்கள் அணைக்கப்பட்டு ஜே.சி.பி இயந்திரம் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (08) இரவு முன்னெடுத்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நினைவாக, நினைவுத்தூபி ஒன்று யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களால் அமைக்கப்பட்டிருந்த குறித்த தூபியே இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தின் வழிகாட்டலுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த கட்டுமானப் பணிகளை இடைநிறுத்துமாறு உயர்கல்வி அமைச்சும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும், 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு உத்தரவிட்டிருந்தது.

இருந்த போதிலும் முள்ளிவாய்க்கால் நினைவிடத்தை அமைக்கும் பணிகள் மாணவர்களால் நிறைவுசெய்யப்பட்டு நினைவேந்தல் நிகழ்வும் நடத்தப்பட்டது.

இந்நிலையில் நினைவுத் தூபி நேற்று முன்தினம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என்று இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை, பல்கலைக்கழக நிர்வாகத்தின் தீர்மானமே என தெரிவித்துள்ள அவர், அந்த விடயத்திற்கும் இராணுவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவம் இவ்விடயத்தில் தலையிடப் போவதில்லை எனவும் இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மேலும் பல்கலைக்கழகத்திற்குள் அமைதியின்மை ஏற்பட்டு, அதனை பொலிஸாரினால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடியாத பட்சத்தில் மாத்திரமே இராணுவம் களமிறங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு - தெற்கு ஐக்கியத்திற்கு தடை: பல்கலை மானிய ஆணைக்குழு தலைவர்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி அது வடக்கு தெற்குக் கிடையிலான ஐக்கியத்திற்கு தடையாக அமையக் கூடும் என, பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்வில் அவர் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் 2018ஆம் வருட காலப்பகுதியில் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டு பல்கலைக்கழகத்தின் குழுவினால் ஏதோ ஒரு நினைவுத்தூபியொன்று அதற்குள் கட்டியெழுப்புவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்தோடு அந்த நினைவுத்தூபியை அடிக்கடி மேம்படுத்தப்பட்டதான விடயத்தையும் அறியக்கூடியதாகவுள்ளது. இருப்பினும் உண்மையில் தெரிவிப்பதாயின், அது வடக்கு தெற்குக் கிடையிலான ஐக்கியத்திற்கு தடையாக அமையக் கூடும். யாழ்ப்பாணம்

பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராஜா அவர்கள் இன்று இலங்கையிலுள்ள அருமையான திறமைமிக்க தலை சிறந்த உபவேந்தர். அத்தோடு மிகவும் திறமையான நிர்வாகி. சமீபகாலப்பகுதியில் நான் கண்ட திறமைமிக்க உபவேந்தர். அவர் தீர்மானமொன்றுக்கு வந்துள்ளார். அந்த நினைவுத் தூபி இன்றைய தினத்திற்கும், நாளைய தினத்திற்கும் பொருந்தாது என்பதினால் அதனை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்திலிருந்து நீக்குவதற்கான முடிவாகும் அது" என்றார்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது: துணைவேந்தர்
யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டபூர்வமற்றது எனவும் அதனை அகற்றிவிட்டு அறிவிக்கும்படி பணிக்கப்பட்டதாலும் நினைவுத்தூபி இடிக்கப்பட்டதாக யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்தது.

அதை அகற்றுமாறு தொடர்ச்சியாக பல்வேறு அழுத்தங்கள் எம்மீது பிரயோகிக்கப்பட்டு வந்தன. அதற்கமைய அந்த நினைவுத் தூபியை இடிப்பதற்கான தீர்மானத்தை யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் மேற்கொண்டது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, பாதுகாப்புத் தரப்பு உட்பட்ட பல்வேறு தரப்புக்களால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்ட அழுத்தம் காரணமாகவே இந்த முடிவுக்குச் செல்ல நேர்ந்தது.

பல்கலைக்கழக நிர்வாகம் இவ்வாறான ஒரு முடிவை எடுக்காவிட்டிருந்தால் வேறு தரப்புக்கள் உள்நுழைந்து அந்த நினைவுத்தூபியை அகற்றியிருக்கக்கூடும். அவ்வாறு நடைபெறுவது பல்கலைக்கழகத்துக்கு அழகல்ல என்பதால் நாம் இவ்வாறான ஒரு நடவடிக்கையை முன்னெடுத்தோம் என துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.

நாளை ஹர்த்தாலுக்கு அழைப்பு
இச்சம்பவத்திற்கு எதிராக யாழ். பல்கலைக்கழகம் முன்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டம் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக, யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துள்ளது.

போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும் சில மாணவர்கள் உண்ணா விரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மாணவர் ஒன்றியம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, நாளையதினம் (11) வடக்கு, கிழக்கு வாழ் தமிழ், முஸ்லிம் மக்கள் ஓரணியில் திரண்டு பூரண கதவடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வேண்டுமென, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது


Add new comment

Or log in with...