கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று கோலாகலமாக ஆரம்பம்

லங்கா ப்ரீமியர் லீக் இருபதுக்கு இருபது அங்குரார்ப்பண தொடர், இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன் இன்று ஆரம்பமாகின்றது.

லங்கா ப்ரீமியர் லீக் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற பெரும் கேள்விகளுக்கு அப்பால் போட்டித் தொடர் நடைபெறுவது இலங்கை கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

இன்று ஆரம்பமாகும் தொடர் டிசம்பர் 16ம் திகதிவரை சகல போட்டிகளும் ஹம்பாந்தோட்டை சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. ஆரம்பத்தில் இப்போட்டித் தொடர் சூரியவெவ மஹிந்த ராஜபக்‌ஷ சர்வதேச விளையாட்டு மைதானம், கண்டி பல்லேகல விளையாட்டு மைதானம் மற்றும் தம்புள்ள ரங்கிரி விளையாட்டு மைதானம் ஆகியவற்றில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

பின்னர் ரங்கிரி தம்புள்ள மைதானம் நீக்கப்பட்டு ஏனைய  இரண்டு மைதானங்களில் போட்டி நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டிருந்த போதிலும் இறுதியாக இடம் பெற்ற பேச்சுவார்த்தைகளில் சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் மாத்திரம் போட்டிகள் நடைபெறும் என்று உத்தியோகபூர்வமாக அறிவிப்பட்டது. அந்த வகையில் ஆரம்ப நிகழ்வு இன்று ஹம்பாந்தோட்டை சூரியவெவ மைதானத்தில் 5 அணிகளின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ளது. இதில், கொழும்பு கிங்ஸ், தம்புள்ளை வைகிங்ஸ், காலி க்ளேடியேட்டர்ஸ், யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் மற்றும் கண்டி டஸ்கர்ஸ் என அணிகள் பெயரிடப்பட்டுள்ளன.

மொத்தமாக 23 போட்டிகள் இடம்பெறவுள்ளன. இறுதிப்போட்டி டிசம்பர் 16ம் திகதி சூரியவெவ மஹிந்த ராஜபக்ஸ சர்வதேச மைதானத்தில் நடைபெறும்.

லங்கா பிரீமியர் லீக் 2020 உலக விளையாட்டுத் துறையில் இலங்கையை பலப்படுத்தும் ஒரு போட்டியாகவும் உள்ளதுடன், இப்போட்டியானது இப்போதே உள்ளூர் மற்றும் சர்வதேச விளையாட்டு பார்வையாளர்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வீரர்கள், பார்வையாளர்கள் மற்றும் நாட்டின் நீண்டகால நலனை கருத்திற்கொண்டு விளையாட்டு அமைச்சு, இலங்கை கிரிக்கெட் மற்றும் எல்.பி.எல் 2020 அமைப்பாளர்கள் ஒன்றிணைந்து எல்.பி.எல் 2020 போட்டியை நடத்துகின்றனர்.

கொரோனா உலகளாவிய தொற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விளையாட்டு, சுற்றுலாத் துறையை வலுப்படுத்தவும், இலங்கையை உலக வரைபடத்தில் விளையாட்டு மூலம் வலுவான நாடாக உயர்த்தவும் இந்த போட்டி ஒரு வலுவான அடித்தளமாக அமையும்.


Add new comment

Or log in with...