மாணவருக்கான நலன் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுக்க ஏற்பாடுகள்

கொரோனா தொற்று பாதிப்பினால் பாடசாலைப் பிள்ளைகளுக்கு தடைப்பட்டவற்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான பல்வேறு செயல் திட்டங்களை ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ வேலைத் திட்டத்துக்கமைய மகளிர்,சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு, கல்விச் சேவைகள் அமைச்சு மேற்கொண்டுள்ளது.

உலகளாவிய ரீதியில் பாடசாலைப் பிள்ளைகளுக்கு பல்வேறு கஷ்டங்களையும் தோற்றுவித்துள்ள கொரோனா தொற்றில் இருந்து எமது தேசத்தின் பிள்ளைகளைக் காத்து அவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்பின்றி முன்னெடுக்கப்படுவதற்கான பல்வேறு திட்டங்கள் செயற் படுத்தப்பட்டு வருகின்றன.

அரசின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கையின் பிரகாரம் பாடசாலைப் பிள்ளைகளுக்கு உணவு வழங்கல் செயல் திட்டம் கொரோனா தொற்றினால் தடைப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக பிள்ளைகளுக்கான உணவுப் பொட்டலம் வழங்கும் மாற்றுத் திட்டம் மகளிர்,சிறுவர் அபிவிருத்தி கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பியல் நிசாந்த தலைமையில் களுத்துறை மாவட்டத்தின் வராபிட்டிய கனிஷ்ட வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கோவிட் 19 தொற்றினால் பாடசாலைப் பிள்ளைகளுக்கு தடைப்பட்ட அனைத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொள்ளும். பிள்ளைகளின் பல்வகை கல்விப் பண்பாடுகள் மற்றும் வெளிச் செயற்பாடுகள் என்பன பாடசாலையில்தான் பூரணத்துவம் பெறுகின்றக. பிள்ளைகளின் கல்வி அபிவிருத்தி உள்ளிட்ட விஷயங்களை தடையின்றி முன்னெடுப்பது தொடர்பில் அரசு கரிசனையுடன் செயல்பட்டு வருகின்றது.

ஆரம்பக் கல்விக்கு தேவையான வசதிகளை வழங்குவது எனது அமைச்சின் பொறுப்பாகும். அமைச்சைப் பொறுப்பேற்ற இரண்டு மாத காலத்தில் முடிந்தவற்றைச் செய்துள்ளேன். அரசின் பிள்ளைகளுக்கு உணவுப் பொட்டலம் வழங்கும் திட்டத்தின் கீழ் எமது மாணவ சமுதாயம் நெருக்கடியான பெரும் பயனடையும் என இராஜாங்க அமைச்சர் அங்கு உரையாற்றுகையில் தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை உலகலாவிய நெருக்கடியாகும். கொவிட்-19 நெருக்கடிக்கு ஆரம்பத்திலேயே ஜனாதிபதி தலைமையில் ஆக்கபூர்மான பல்வகை செயல் திட்டங்கள் தேசத்தில் முன்னெடுக்கப்பட்டமை, செயல்படுத்தப்பட்டமை பாராட்டத்தக்கதாகும். இந்த ஆபத்தான தொற்றிலிருந்து தேசத்தையும் மக்களையும் முடிந்தளவில் பாதுகாத்துக் கொள்வதற்கு மாணவ சமுதாயம் உள்ளிட்ட மனித சமூகத்தின் இதயபூர்வமான ஒத்துழைப்பு அத்தியாவசியமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

 

-எம்.எஸ்.எம்.முன்தஸிர்
(பாணந்துறை மத்திய
குறூப் நிருபர்) 


Add new comment

Or log in with...