இஸ்லாம் வலியுறுத்தும் சகோதரத்துவம்

இற்றைக்கு 1,400 வருடங்களுக்கு முன்னர் கோத்திரங்களாகவும் குழுக்களாகவும் பிரிந்து நின்று, பெருமை பாராட்டி, பகைமை வளர்த்து சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் மத்தியில் தான் முஹம்மத்(ஸல்) அவர்கள் பிறந்து வளர்ந்தார்கள். அன்னாரை சர்வ வல்லமை படைத்த அல்லாஹ்தஆலா உலகிற்கான இறுதித்தூதராகத் தேர்ந்தெடுத்து உலகலாவிய இறுதி இறைத்தூதை அவர் ஊடாக உலகிற்கு அருளினான். அன்னார் அத்தூதை முழுமையாக மக்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளார்கள்.

அந்த வகையில் கோத்திரங்களாகவும் குழுக்களாகவும் பிரிந்து நின்று பெருமை, பகைமை பாராட்டுவதையும் சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதையும் முற்றாக நிராகரித்துள்ள இஸ்லாம் முஸ்லிம்கள், மனிதர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் சகோதரர்கள் என வலியுறுத்தியுள்ளதோடு அதற்கு தேவையான வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது. இதனை அல் குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் பரவலாகக் காணக் கூடியதாக உள்ளது.

‘நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களே... ஆகவே உங்கள் சகோதரர்களுக்கிடையில் ஒழுங்கை(யும் சமாதானத்தையும்) நிலைநிறுத்துங்கள். (இதில்) அல்லாஹ்வுக்கு பயந்து நடவுங்கள். (இதன் காரணமாக) அவனுடைய அருளை நீங்கள் அடைந்து கொள்வீர்கள்'.
(அல் குர்ஆன் 49:10)

இவ்வசனம் இறைநம்பிக்கையாளர்களின் பிரதான பண்பை வௌிப்படுத்தி நிற்கின்றது. அதனால் இவர்கள் மத்தியில் பேதங்களோ ஏற்றதாழ்வுகளோ காணப்படவே முடியாது. அனைவரும் சகோதரர்களாவர். அதற்கேற்பவே செயற்பட வேண்டியவர்கள். அது அல்லாஹ்வின் அருளை பெற்றுக்கொள்ளும் செயற்பாடும் ஆகும். அதனால் அதற்கேற்ப செயற்படுவது ஒவ்வொருவரும் நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கடமையுமாகும்.

இதேவேளை மற்றொரு வசனத்தில், ‘எவர்கள் தங்களிடம் அல்லாஹ்வின் தெளிவான வசனங்கள் வந்த பின்னரும் தங்களுக்குள் (கருத்து) வேறுபட்டு பிரிந்து போனார்களோ அவர்களைப் போன்று நீங்களும் ஆகி விட வேண்டாம். இத்தகையவர்களுக்கே (மறுமையில்) மகத்தான வேதனையும் உண்டு'.
(அல் குர்ஆன் 3:105)

இதன்படி எந்தவொரு இறை விசுவாசியும் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் கொண்டு பிரிந்து விட முடியாது. அதற்கு அல்லாஹ் அனுமதிக்கவும் இல்லை இஸ்லாத்திலும் இடமில்லை. இந்த இறைக்கட்டளையை மீறி செயற்படுபவர்கள் கடந்த காலசமூகங்களைப் போன்றவர்களாகவர். அவர்களுக்கு மறுமையில் கடும் தண்டனை கிடைக்கப்பெறும். அதனையும் அல்லாஹ் குறிப்பிட்டு வைத்தே இருக்கின்றான்.

மேலும் 'அன்றி நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப(ட்)டு (உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின் நீங்கள் தைரியத்தை இழந்து உங்கள் சக்தி (ஆற்றல்) போய் விடும். ஆகவே நீங்கள் (கஷ்டங்களை சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்'.
(அல் குர்ஆன் 8:46)

இவ்வசனம் இறைவிசுவாசிகள் தங்களுக்குள் தர்க்கித்து கொள்வதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்கூறுகின்றது. அதனால் என்ன தான் கஷ்டநிலைகள் ஏற்பட்டாலும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிபட்டவர்களாக பொறுமையாக இருக்க வேண்டும். அவர்களுடன் தான் அல்லாஹ் நிச்சயமாக இருப்பான்.

மற்றொரு வசனம் ‘மேலும் நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தரக்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்து விட வேண்டாம். உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள்'.
(அல் குர்ஆன் 3:103)

இந்த வசனங்களின் படி அல்லாஹ்வின் தௌிவான இறைத்தூது கிடைக்கப்பெற்ற பின்னரும் தங்களுக்குள் தர்க்கித்துக்கொள்ள இடமளிக்கப்படவில்லை என்பது தௌிவாகின்றது. ஏனெனில் அதன் விளைவாக ஏற்படும் பாதிப்புக்களையும் பலவீனங்களையும் அவன் சுட்டிக்காட்டியுமுள்ளான்.

இவ்வாறு அல்லாஹ் சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி கட்டாயப்படுத்தியுள்ள நிலையில் நபி (ஸல் அவர்கள் அதற்கான முன்மாதிரியாக வழிகாட்டல்களை வழங்கி செயற்பட்டுள்ளார்கள். சகோதரத்துவத்தையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்புவதற்கான பல்வேறு வேலைத்திட்டங்களையும் முன்னெடுத்துள்ளார்கள். இதற்கு ஹதீஸ்களில் நிறையவே ஆதாரங்களும் எடுத்துக்காட்டுக்களும் உள்ளன.

அந்த வகையில் அன்னார் மக்காவிலிருந்து மதீனாவுக்கு 'ஹிஜ்ரத்' சென்றதும் மக்காவிலிருந்து சென்ற முஸ்லிம்களையும் (முஹாஜிர்களையும்) மதீனாவில் இருந்த முஸ்லிம்களையும் (அன்ஸாரிகள்) ஒன்றிணைத்து சகோதரத்துவ ஒப்பந்தத்தை செய்தார்கள். இந்த ஒப்பந்தத்தின் கீழ் மதீனாவாசிகள் தங்களது சொத்து, செல்வங்களை மக்காவாசிகளுடன் பகிர்ந்து கொண்டார்கள். இறை விசுவாசிகள் அனைவரும் சகோதரர்களே என்பதை நிரூபித்துக்காட்டினார்கள்.

'தமக்கு விரும்புவதை தமது சகோதரருக்கும் விரும்பும் வரை நீங்கள் இறை நம்பிக்கையாளர்களாக மாட்டீர்கள்’ என்று ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

மற்றொரு தடவை 'ஒரு முஸ்லிம் மூன்று நாட்களுக்கு மேல் மற்றொரு முஸ்லிமுடன் கதைக்காமல் (பேசாமல்) பகைமை பாராட்டிக்கொண்டிருக்க மாட்டார்' என்றும் முஹம்மத் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இதன்படி ஒற்றுமையினதும் சகோதரத்துவத்தினதும் முக்கியத்துவம் எத்தகையது என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை.

இதேவேளை 'அனைத்து முஃமீன்களும் ஒரே மனிதனைப் போலாவர். ஒருவரது கண்ணில் வலி ஏற்பட்டால் அவரது அனைத்து உறுப்புக்களும் வருந்துகின்றன. குறிப்பாக தலைவலி ஏற்பட்டால் அனைத்து உறுப்புக்களும் வேதனை அடைகின்றன' என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'ஒரு முஃமின் (இறைநம்பிக்கையாளர்) மற்றொரு முஃமினுக்கு ஒரு கட்டடத்தைப் போன்றவர்களாவர். கட்டடத்தின் ஒரு பகுதி மற்ற பகுதிக்கு வலு சேர்க்கின்றது' என்றும் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

அதேநேரம் ‘பகைமை கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். புறக்கணிக்காதீர்கள். சகோதரர்களாக அல்லாஹ்வின் அடிமைகளாக வாழுங்கள். ஒரு முஸ்லிம் தனது சகோதர முஸ்லிமை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்து ஒதுக்கிட வேண்டாம்' என்றும் அன்னார் தெரிவித்துளளார்கள். (ஆதாரம்: புகாரி)

இந்த நபிமொழிகளின் படி ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமை வெறுக்கவோ ஒதுக்கி விடவோ பகைமை பாராட்டவோ முடியாது.

மேலும் 'ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரராவார். ஒருவர் மற்றொருக்கு அநியாயம் செய்யக்கூடாது. அவரை எதிரியிடம் ஒப்படைக்கக்கூடாது. யாரொருவர் தமது சகோதரரின் தேவையை நிறைவேற்ற ஈடுபடுகின்றாரோ அல்லாஹ் அவரது தேவையை நிறைவேற்றுகின்றான். யாரொருவர் ஒரு முஸ்லிமின் கஷ்டத்தை அகற்றுகின்றாரோ அவருக்கு அல்லாஹ் மறுமையின் கஷ்டத்திலிருந்து ஒரு கஷ்டத்தை அகற்றுகின்றான். எவர் ஒருவர் மற்றொரு முஸ்லிமின் குறையை மறைக்கின்றாரோ அவரது குறையை அல்லாஹ் மறுமையில் மறைத்து விடுவான்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

மற்றொரு ஹதிஸில் 'எந்தவொரு முஸ்லிம் ஆடையின்றி இருக்கும் முஸ்லிமுக்கு ஆடை அணிவிக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சொர்க்கத்தின் பச்சை நிறப்பட்டாடைகளில் ஒன்றை அணிவிப்பான். எந்தவொரு முஸ்லிம் பசியுடன் இருக்கும் மற்றொரு முஸ்லிமுக்கு உணவளிப்பாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் சொர்க்கத்தின் கனிகளில் இருந்து உணவளிப்பான். எந்தவொரு முஸ்லிம் தாகத்துடன் இருக்கும் போது அந்த முஸ்லிமுக்கு தாகம் தீர்க்க நீர் புகட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்கு மறுமையில் முத்திரையிடப்பட்ட சுவனத்து மதுவை பருக வழங்குவான் எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: ஸுனனுத் திர்மிதி)

இவ்வாறு ஒற்றுமையையும் சகோதரத்துவதையும் போதிக்கும் ஹதீஸ்களும் நிறையவே உள்ளன.

சகோதரத்துவம், ஒற்றுமை தொடர்பில் அல் குர்ஆனின் கட்டளைகள், ஹதீஸ்களின் வலியுறுத்துதல்கள் மற்றும் நபிகளாரின் வழிகாட்டல்கள் என்பவற்றை எடுத்து நோக்கும் போது மக்களுக்கிடையில் அன்பு, கருணை, பாசம், ஒருவருக்கிடையில் புரிந்துணர்வு என்பவற்றை ஏற்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டிருப்பதை அவதானிக்கலாம். மக்கள் மத்தியில் இவ்வாறான பண்புகளை கட்டியெழுப்பும் போது தான் சமூக வாழ்வியலில் தயாள குணம், நற்பண்புகள் தலைத்தோங்கும். அவை அமைதி, சமாதானத்திற்கு வழிவகுக்கும். அது இறைவழிகாட்டலுக்கு ஏற்ப ஒழுகிய சமூகமாகத் திகழும். அதனால் தான் இஸ்லாம் ஒற்றுமை, சகோதரத்துவத்தை இறைநம்பிக்கையுடன் இணைத்து நோக்குகின்றது. அதனால் முஸ்லிம்கள் தங்களுக்குள் பகைமை பாராட்டவோ முரண்பாடு கொள்ளவோ முடியாது. ஏனெனில் இறைநம்பிக்கை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இன்றியமையாதது. அதற்கு முரணாக செயற்படவே முடியாது.

இருந்த போதிலும் ஒற்றுமை, சகோதரத்துவத்துவத்திற்கு இஸ்லாம் வழங்கியுள்ள முக்கியத்துவம், சிறப்புக்கள் குறித்து கவனம் செலுத்தப்படாத நிலைமை காணப்படுகின்றது. இதற்கு தம் விருப்பு வெறுப்புகளுக்கு அளிக்கும் முக்கியத்துவமே காரணமாகும். ஆனால் அல்லாஹ்வினதும் நபிகளாரதும் வழிகாட்டல்களுக்கு ஏற்ப செயற்படுவதே கட்டாய கடமை.

மர்லின் மரிக்கார்


Add new comment

Or log in with...