இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களைஅழைத்துச் செல்ல INS ஜலஸ்வா கப்பல் சேவை

ஜூன் 01 ஆம் திகதி கொழும்பிலிருந்து தூத்துக்குடி புறப்படும்

நாடு திரும்ப முடியாத நிலையில்  இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகளை மீட்கும் முயற்சியின் அடுத்த நகர்வாக எதிர்வரும் ஜூன் 01 ஆம் திகதி INS ஜலஸ்வா கப்பல் கொழும்பிலிருந்து தூத்துக்குடிக்கு பயணிக்கவுள்ளது.

தமிழ் நாட்டைச்சேர்ந்த இந்திய பிரஜைகள் இந்த கப்பலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 “வந்தே பாரத்’’ திட்டத்தின் கீழ், வெளிநாடுகளில் சிக்குண்டுள்ள இந்தியர்களை மீட்டுவருவதற்காக இந்திய கடற்படைக் கப்பல்கள் சேவையில் அமர்த்தப்பட்டிருக்கும் “சமுத்ர சேது” நடவடிக்கையின் அடுத்த கப்பல் பயணமாக இது அமைகின்றது. 

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் மேற்கொள்ளப்பட்ட பதிவுகளின் அடிப்படையில் இந்த கப்பலுக்கான பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சிக்குண்டுள்ளவர்களுக்காக இந்திய உள்துறை அமைச்சினால் கடந்த மே 5ஆம் திகதி வெளியிடப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமையின் பிரகாரம், அவசரமாக நாடு திரும்ப வேண்டிய நிலையில் இருப்பவர்களுக்கு, குறிப்பாக நிர்க்கதியாகியுள்ள குடிபெயர் தொழிலாளர்கள், விசா காலாவதியான நிலையில் தங்கியிருப்பவர்கள், மருத்துவ உதவிகள் தேவைப்படுவோர், கர்ப்பிணிகள், பெண்கள், முதியவர்கள், குடும்ப உறுப்பினரின் மரணத்தை தொடர்ந்து உடனடியாக இந்தியா திரும்புவதற்கு கோரிக்கைகளை முன் வைத்திருப்போர் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட தரப்பினருக்கு, இப்பயணத்தில் முன்னுரிமை வழங்கப்படும்.

இந்தக் கப்பல் சேவை தொடர்பான விபரங்கள் இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் பலர் நாடு திரும்புவதற்கான கோரிக்கையை முன்வைத்திருக்கும் நிலையில் பதிவு செய்யப்பட்டிருக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களை மாத்திரமே இக் கப்பலில் அனுமதிக்க முடியும்.

இந்நிலையில் பயணத்துக்காக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் அறிவித்தல்கள் அனுப்பப்படும்.

கப்பல் பயணத்துக்கான செலவீனத்தை பயணிகள் பொறுப்பேற்க வேண்டிய தேவையுள்ளதுடன் அவர்கள் இந்தியாவை சென்றடைந்ததும் கட்டாயமான தனிமைப்படுத்தல் நடைமுறைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

தனிமைப்படுத்தல் வசதிகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட செயற்பாட்டு முறைமை குறித்த தகவல்கள் மாநில மற்றும் UT (யூனியன்/ டெரிடோரிட்டி) அரசாங்கங்களால் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தகவல்களும் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இதுவரையில் தம்மை இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பதிவு செய்ய தவறியிருப்பின் இணையத்தளத்தில் பதிவு செய்யுமாறு கோரப்படுகிறார்கள் https://hcicolombo.gov.in/COVID_helpline நாடு திரும்ப முடியாமல் இலங்கையில் தங்கியிருக்கும் இந்திய பிரஜைகள் பொறுமையைப்பேணுமாறும், இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் இணையத்தளம் மற்றும் சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் அறிவித்தல்களை அறிந்து கொள்ளுமாறும் நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.


Add new comment

Or log in with...