தேர்தலை ஜூனில் நடத்த முடியாது; ஆணைக்குழு தெரிவிப்பு

தேர்தலை ஜூனில் நடத்த முடியாது; ஆணைக்குழு தெரிவிப்பு-Could Not Held Election on June 20-Elections Commission

சுகாதாரப் பிரிவு உத்தரவாதமளித்த பின் 9 - 11 வாரங்கள் அவசியம்

எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்த முடியாத நிலை காணப்படுவதாக, தேர்தல்கள் ஆணைக்குழு உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

பாராளுமன்ற கலைப்பு, தேர்தல் திகதி தொடர்பிலான வர்த்தமானிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 08 அடிப்படை உரிமைகள் மனுக்கள் மீதான பரீசீலனை இன்று (20) மூன்றாவது நாளாக இடம்பெற்றபோதே, தேர்தல்கள் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.

இன்று (20) பிரதம நீதியரசர் தலைமையில் கூடிய உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவின் முன்னிலையில், ஆணைக்குழுவின் சார்பில் முன்னிலையான, ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், திட்டமிட்டபடி ஜூன் 20ஆம் திகதி தேர்தலை நடத்த முடியாது என மன்றிற்கு தெரிவித்தார்.

சுகாதார பிரிவினரால் தேர்தலை நடாத்த முடியும் என உத்தரவாதம் வழங்கப்பட்டதன் பின்னர், ஆணைக்குழுவிற்கு தேர்தல் முன்னாயத்தங்களை மேற்கொள்ள 9 - 11 வாரங்கள் அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஊரடங்கு உத்தரவு மற்றும் வீடுகளிலிருந்து வெளியே செல்வது தொடர்பான கட்டுப்பாடுகள் காணப்படுவதனால், மனிதவளம், வேலை நேரம் ஆகியன மிகவும் குறைவாகக் காணப்படுவது இதற்கு மேலும் பாதிப்பு என அவர் மன்றிற்கு விளக்கினார்.


Add new comment

Or log in with...