ரிஷாத்தின் வங்கி கணக்கிலிருந்து ஒரு இலட்சம் டொலர் கைமாறல்

உடன் விசாரணை வேண்டும்

நல்லாட்சி அரசின் காலத்தில் தனது வங்கிக் கணக்கில் இருந்து ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் வெளியில் அனுப்பியுள்ளதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளதென கைத்தொழில் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். இரண்டாவது தடவையாக மேலும் ஒரு இலட்சம் அமெரிக்க டொலர்களை அனுப்ப தயாரான போது உயிர்த்த ஞாயிறு தொடர்பாக விசாரணை நடத்தும் பொலிஸ் பணியகம் இது பற்றி அறிந்து கொண்டதால் அந்த செயற்பாடு நிறுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டினார். கைத்தொழில் அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,இது தொடர்பில் மேலும் கூறியதாவது:

ரிசாத் பதியுதீனுக்கு சொந்தமான இடமொன்றை சோதனையிட்டதில் பல்வேறு நபர்களின் பெயர்களில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளின் 227 புகைப்படப் பிரதிகள்,8 காணிகளின் மூலப்பிரதிகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் துரித விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபரிடமும் சி.ஐ.டி யிடமும் கோருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவ்வாறு எத்தனை ஏக்கர் காணி பெறப்பட்டிருக்கும்? மோசடி செய்யப்பட்டவற்றில் சிறிதளவானவை குறித்தே தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் விசாரணைகளில் மேலும் பல தகவல்கள் அம்பலமாகும் எனவும் அவர் கூறினார்.நல்லாட்சி அரசாங்கத்தில் ரிசாத் பதியுதீன் திரட்டிய பெருந்தொகை சொத்துக்கள் தொடர்பான தகவல்கள் சி.ஐ.டி விசாரணையில் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.(பா)

 


Add new comment

Or log in with...