பாரிய தேர்தல் முறைப்பாடுகள் எதுவுமில்லை - ஆணையாளர்

கடந்த தேர்தலிலும் பார்க்க இம்முறை மிகக் குறைந்த முறைப்பாடுகளே கிடைக்கப் பெற்றுள்ளன என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
 
இன்று (17) வாக்கெடுப்பு நடைபெற்றதன் பின்னர் தேர்தல்கள் ஆணையாளர் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணையாளர் அலுவகலத்தில் ஊடகவியலாளர்களிடம் விளக்கமளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
 
மேலும் அதிகளவான சிறிய முறைப்பாடுகள்  கடைசி ஒன்றரை மணித்தியாலங்களில் கிடைக்கப்பெற்றதாக அவர் தெரிவித்தார். இதில் எங்களுக்கு வாக்களிக்க முடியவில்லை என்றே அதிகளவான முறைப்பாடுகள் கிடைத்ததாக அவர் தெரிவித்தார்.
 
இணையத்தளங்கள் மூலம் வெளியான போலி விளம்பரங்கள் தொடர்பாக தமக்கு முறைப்பாடு கிடைத்திருப்பதாக தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர், 2013 இல் புத்தளத்தில் கணக்கிடப்பட்ட வாக்குச் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்ட போது வெளியான புகைப்படத்தை பயன்படுத்தி, அது இம்முறை கொழும்பில் கிடைக்கப்பெற்ற வாக்குச்சீட்டுகள் என போலியான விளம்பரம் ஒன்றை இணையத்தளத்தில் வெளியிட்டு மக்களை குழப்ப முயற்சித்தமை தொடர்பாகவும் அவர் இதன்போது தெளிவுபடுத்தினார்.
 
தேர்தல் முடிவை மிகவும் அமைதியாகக் கொண்டாடுமாறும், அது போன்று தேர்தலில் ஏற்படும் தோல்வி குறித்தும் முறையாக செயற்படுமாறும் அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
 
சர்வதேச கண்காணிப்பாளர்களிடமிருந்து பாரியளவிலான முறைப்பாடுகளும் கிடைக்கப்பெறவில்லை எனவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
 

Add new comment

Or log in with...