இறக்காமம் மாணிக்கமடுவில் புத்தர் சிலை; மக்கள் அச்சம்

 

அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மாணிக்கமடு எனும் பிரதேசத்தில்  நேற்று (29) திடீரென வந்த குழுவொன்றினால் புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதை அடுத்து அப்பிரதேச மக்கள் மத்தியில் பெரும் அச்சநிலை தோன்றியுள்ளது.

சுமார் 150க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வாழ்ந்து வரும் பழமைமிக்க மாணிக்கமடு எனும்  இக்கிராமத்தின் மாயக்கல்லிமலையின் உச்சியில் இச்சிலை வைகக்கப்பட்டுள்ளதுடன் பௌத்த கொடிக்கம்பங்களும் அங்கு பறக்கவிடப்பட்டுள்ளமை தமிழ், முஸ்லிம் மக்களிடையே பெரும் அச்ச நிலையை தோற்றுவித்துள்ளது.

அம்பாறையிலிருந்து டிப்பர் வாகனம் ஒன்றில் ஏற்றி வரப்பட்ட இந்த பாரிய புத்தர் சிலையுடன் வான் மற்றும் ஜீப்வண்டிகள் என பல வாகனங்கள் சகிதம் பௌத்த பிக்குகளும், நூற்றுக்கணக்கான சிங்களவர்களும் பொலிஸாரின் உதவியுடன் அங்கு வாகனங்களில் வந்து இறங்கியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

பல்லாண்டு காலமாக அங்கு வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் எல்லைக் கிராமங்களிலுள்ள முஸ்லிம், சிங்கள மக்களுடன் மிகவும் சகோதரத்துவ மனப்பாங்குடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பிரதேசத்தில் கால் நடை வளர்ப்பு மற்றும் விவசாயம் என்பனவற்றை மேற்கொண்டு தமது ஜீவனோபாயத்தை மேற்கொண்டு வரும் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இவ்வாறான செயற்பாடு இனக்குரோதங்களையும், சந்தேகங்களையும் ஏற்படுத்தும் என அக்கிராமவாசிகள் மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மேலும் சிறுபான்மை மக்களின் வாழும் உரிமை மறுக்கப்படுவதுடன் இச்செயற்பாடு மக்கள் மனதில் அச்சமான நிலையையும் ஏற்படுத்தியுள்ளது என்றார்.

பௌத்தர்கள் எவரும் அந்தக்ககிராமத்தில் வாழ்ந்து வந்திராத நிலையில் நல்லாட்சி அரசாங்கத்தில் பொலிஸாரின் உதவியுடன் அடாவடித்தனமாக பௌத்த சிலை அமைக்கப்பட்ட விடயம் தொடர்பில் மக்கள் பலத்த கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்திற்குரியதாகக் கருதப்படும் இந்த மலைப் பிரதேசத்தை முஸ்லிங்கள் பொலிஸாரின் உதவியுடன் ஆக்கிரமிப்புச் செய்து வருவதாக அங்கு வந்த பௌத்த தேரர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை நாட்டில் பல்வேறு இனத்தவர்களும், சமயத்தவர்களும் வாழ்ந்து வருகின்ற போதிலும் இது ஒரு பௌத்த நாடு என்பதைன எவரும் மறந்து விடக் கூடாது.

பௌத்த நாட்டில், பௌத்த அரசாங்கத்தின் கீழ் பௌத்த மதத்தை நிலைநாட்டுவதற்கும், ஸ்தாபிப்பதற்கும், பரப்புவதற்கும் எங்கு வேண்டுமானாலும் சென்று நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அரசாங்கம் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது.

எனவே சட்ட ரீதியற்ற முறையில் நாங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை. சகல ஆவணங்களுடன் பொலிஸாரின் அனுமதியுடனேயே இந்நடவடிக்கையை முன்னெடுக்கின்றோம் என அவர் தெரிவித்தார்.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தில் பல எல்லைக்கிராமங்களில் இவ்வாறான செயற்பாடுகள் கடந்த அரசாங்கத்தில் மேற்கொள்ளப்பட்டு தமிழ், முஸ்லிம்களின் காணிகள், கிராமங்கள் அபகரிக்கப்பட்டுள்ளன.

நல்லாட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் அம்பாறை மாவட்டத்திலுள்ள பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் இவ்வாறான இனவாத செயற்பாடுகளின் பின்னணியில் செயற்பட்டு வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இறக்காமம், மாணிக்கமடு தமிழ் கிராமத்தை ஆக்கிரமிப்புச் செய்யும் இந்தநடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு மக்களின் அச்சநிலையை இல்லாமல் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

(அம்பாறை சுழற்சி நிருபர் - ரி.கே. ரஹ்மதுல்லா)

 


Add new comment

Or log in with...