ஜனக ரத்நாயக்கவின் கொள்ளுப்பிட்டி அலுவலகத்திற்கு சீல்

- முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சி இடம்பெறுவதாக முறைப்பாடு
- வெளிநாடு சென்றுள்ள அவர் நாடு திரும்பியதும் திறக்க நடவடிக்கை

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவின் கொள்ளுப்பிட்டியில் உள்ள உத்தியோகபூர்வ அலுவலகத்திற்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திடமிருந்து பெற்ற நீதிமன்ற உத்தரவுக்கமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த அலுவலகத்திற்கு ஒரு சிலர் வந்து முக்கிய ஆவணங்கள் சிலவற்றை அழிக்க முயற்சி செய்வதாக கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று குறித்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனக ரத்நாயக்க தற்போது வெளிநாடு சென்றிருப்பதாகவும், அவர் நாடு திரும்பியதும் குறித்த அலுவலகம் மீண்டும் திறக்கப்படுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் அதன் உறுப்பினர்களுக்கிடையில் கருத்து முரண்பாடு நிலவி வருவதோடு, தற்போது அமுல்படுத்தவுள்ள, மின்சார கட்டண திருத்தம் தொடர்பிலும் பிரச்சினைகள் நிலவி வந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவியிலிருந்து நீக்கும் வகையில் அவருக்கு எதிராக குற்றப்பத்திரம் முன்வைக்கவுள்ளதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அண்மையில் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த குற்றப்பத்திரத்தை எதிர்கொள்ள தாம் தயாராகவுள்ளதாக, மற்றுமொரு ஊடக சந்திப்பில் ஜனக ரத்நாயக்க அதற்கு பதிலளித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...