நாட்டை முடக்கவோ, பயணக் கட்டுப்பாடு விதிக்கவோ தீர்மானமில்லை

நாட்டை முடக்கவோ, பயணக் கட்டுப்பாடு விதிக்கவோ தீர்மானமில்லை-No Travel Restrictions or Lockdown During Coming Long Weekend

- பயணத்தை குறைத்து, ஒன்றுகூடலை தவிர்க்க வேண்டுகோள்
- காற்றினால் கொவிட்-19 பரவும் அபாயம்; முகக்கவசத்தை உரிய முறையில் அணியவும்

கொவிட்-19 பரவல் அதிகரித்து வரும் நிலையில், எதிர்வரும் நீண்ட வார இறுதி நாட்களில், நாட்டை முடக்கவோ, பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கவோ இதுவரை தீர்மானம் எடுக்கப்படவில்லை என, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்று (23) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், தற்போதுள்ள நிலையில் பயணங்களை கட்டுப்படுத்தி, மக்கள் ஒன்றுகூடுவதையும் அவ்வாறு ஒன்றுகூடும் இடங்களுக்கு செல்வதையும் தவிர்க்குமாறு, இராணுவத் தளபதி பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, வார இறுதி நாட்களில் வைபவங்கள், சுற்றுலாக்களை ஒழுங்கு செய்திருந்தால் அவற்றை மேற்கொள்ளாதிருக்குமாறு தெரிவித்த அவர், இவ்வாறான விடயங்களிலும் பார்க்க உயிர் வாழ்வது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுவதே முக்கியமான விடயம் என சுட்டிக் காட்டினார்.

கொவிட்-19 பரவலானது, புதிய பேதங்களின் வீரியம் காரணமாக, காற்றினால் பரவலடைவதாக நீர்ப்பீடனம் மற்றும் மூலக்கூற்று மருத்துவர் பேராசிரியர் நீலிகா மலவிகே சுட்டிக்காட்டினார்.

தொற்றுக்குள்ளான நபர் ஒருவர் முகக்கவசமின்றி குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட இடத்தில் உரையாடுவது உள்ளிட்ட விடயங்களில் ஈடுபட்டு அங்கிருந்து சென்ற நிலையில், அவரை ஒரு போதும் சந்திக்காத நபர் ஒருவர் குறித்த இடத்தில் அல்லது பகுதியில் முகக்கவசமின்றி நிற்கும் நிலையில், காற்றின் மூலம் அதன் தொற்று பரவும் அபாயம் காணப்படுவதாக, நீலிகா மலவிகே குறிப்பிட்டார்.

எனவே, மூக்கு மற்றும் வாய் மூடும் வகையில் முகக்கவசம் அணிந்திருக்குமாறு அவர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தார்.

இவ்வூடகவியலாளர் சந்திப்பில் வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...