சிங்கராஜ வனப்பகுதியில் யோஷிதவுக்கு ஹோட்டல்?

சிங்கராஜ வனப்பகுதியில் யோஷிதவுக்கு ஹோட்டல்?-Defematory Statement Against-Yoshitha Rajapaksa

- பொய்யான குற்றச்சாட்டு என முற்றாக மறுப்பு
- ரூபா 500 மில்லியன் கோரி கடிதம்

சிங்கராஜ வனப்பகுதியில் தனக்கு ஒரு ஹோட்டல் இருப்பதாக ஒரு சிலரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றாக மறுப்பதாக, யோஷித ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஒரு சிலரால் வெளியிடப்பட்டுள்ள கருத்துகள் தொடர்பில், அதனை வெளியிட்ட நபர்களுக்கு எதிராக தனது சட்டத்தரணி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தனது ட்விற்றர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும், கடற்படை அதிகாரியுமான லெப்டினன்ட் கொமாண்டர் யோஷித ராஜபக்‌ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

 

 

கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு தொடர்பான அமைப்பின், சுற்றாடல் மற்றும் சட்ட அதிகாரியான சஜீவ சமிக்கரவினால் தெரிவிக்கப்பட்டதாக வெளியிடப்பட்டுள்ள குறித்த கருத்துக்கு எதிராகவே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் குறித்த கருத்தை வெளியிட்ட நபருக்கு எதிராக அவதூறு தெரிவித்ததாக, தனது சட்டத்தரணி மூலம் அனுப்பப்பட்ட கடிதத்தையும் அவர் வெளியிட்டிருந்தார்.

அக்கடிதத்தில், குறித்த நபரை தன்னிடம் மன்னிப்புக் கோருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, தெரிவிக்கப்பட்ட அவதூறு தொடர்பில் 7 நாட்களுக்குள் ரூபா 500 மில்லியனை செலுத்துமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது சட்டத்தணியால் அனுப்பப்பட்டுள்ள அக்கடிதத்தில், தனது கருத்தில் எந்தவிதமான உண்மையும் இல்லை என ஒப்புக் கொண்டு, யோஷிதவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும், இந்த தவறான செய்தி ஊடகங்கள், சமூக ஊடகங்கள்,  இணைய ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தால், அதை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது தரப்பினருக்கு அறிவித்து, தொடர்புடைய செய்திகளை அகற்ற நடவடிக்கை எடுத்தல், சம்பந்தப்பட்ட கருத்து உண்மை இல்லை என்று செய்திக்குறிப்பு மூலம் ஊடகங்களுக்கு தெரிவித்தல், யோஷித ராஜபக்ஷ மீது மீண்டும் எந்தவொரு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளும் கூறப்பட மாட்டாது என அறிவித்தல், 7 நாட்களுக்குள் இழப்பீடாக ரூ. 500 மில்லியனை செலுத்துதல், ஆகிய விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் சஜீவ சமிக்கர பின்வருமாறு கருத்து வெளியிட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது,

"அண்மையில், லங்காகம மற்றும் அதனை அண்டி வாழும் மக்களுக்கு போக்குவரத்து வசதி செய்வதாக தெரிவித்து, சிங்கராஜ வனப் பகுதியில், பாரிய சட்ட விதிமீறல் நடவடிக்கையாக காடழிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்புலத்தில் பாரிய முதலீட்டு நடவடிக்கைகள் காணப்படுவதோடு, யோஷித ராஜபக்‌ஷவுக்குச் சொந்தமான ஹோட்டலொன்றும் அங்கு காணப்படுவதை நாம் அறிவோம்.."


Add new comment

Or log in with...