அம்பாறையில் அறக்கொட்டியான் தாக்கம்; கட்டுப்படுத்த அதிகாரிகள் துரித நடவடிக்கை

விவசாயிகளுக்கு துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வு

அம்பாறை மாவட்டத்தில்  பெரும்போக நெற்செய்கையில் கபில நிறத் தத்திகளின் (அறக்கொட்டியான்) தாக்கம் வேகமாக பரவி வருவருகின்றது. இதனைக் கட்டுப்படுத்துவதற்கான துரித நடவடிக்கையை மாவட்ட விவசாயத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.  

இம்மாவட்டத்தில்  கபில நிறத்தத்திகள் மற்றும் பங்கசுகளின் தாக்கம் வேகமாகக் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பருவ மழையைத் தொடர்ந்து, கடுமையான வெப்பமான காலநிலை ஏற்பட்டுள்ளதாலும், அளவுக்கதிகமான இரசாயனப் பொருட்களின் பாவனை மற்றும் அதிகளவிலான பயிர் அடர்த்தி,  களைகளை முறையாகக் கட்டுப்படுத்தாமை போன்ற காணரங்களினால் இந்நோயின் தாக்கம் ஏற்பட்டுவருவதாக விவசாயத் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இந்நோய் காணப்படுமாயின் சிபார்சு செய்யப்பட்ட பீடை நாசினியை குறிப்பிடப்பட்டளவில் நெற்பயிரின் அடியில் படும்வகையில் விவசாயப் போதனாசிரியரின் ஆலோசனையுடன் விசிற வேண்டும். 

நெற்பயிரினை நாளாந்தம் அவதானமாக கண்காணிப்பதுடன், தத்திகளின் தாக்கத்தை அடையாளம் கண்டு உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  இது தொடர்பாக விவசாயிகளை விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களம், அட்டாளைச்சேனை பிரதேச விவசாய விரிவாக்கல் மத்திய நிலையத்துடன் இணைந்து மேற்கொண்டு வருகின்றது. 

அம்பாறை மாவட்ட விவசாய திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் எம்.எப்.ஏ.சனீர் தலைமையில் மாவட்ட விவசாய நிலையத்தின் பண்ணை முகாமையாளர் எம்.வை.எம்.நியாஸ், அட்டாளைச்சேனை விவசாய பயிற்சி நிலையப் பொறுப்பு விவசாய போதனாசிரியர் ஏ.எச்.ஏ. முபாரக் உள்ளிட்ட விவசாயப் போதனாசிரியர்கள், விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள் பலர் இணைந்து இச்செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர். 

நெற்செய்கையில் தற்போது ஏற்பட்டு வரும் குறித்த நோய்கள் தொடர்பில் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை  ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்கள் வழங்கியும், ஒலிபெருக்கி மூலமான அறிவித்தல்களை வழங்கியும் இந்நோயின் தாக்கம் அதிகம் காணப்படும் வயற் பிரதேசங்களுக்கு சென்று அதுதொடர்பான விளங்கங்களையும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கையினையும் முன்னெடுத்து வருகின்றனர். 

அண்மையில் ஏற்பட்ட பருவகால மழை, வெள்ள அனர்த்தம் மற்றும் ஆறுகள், குளங்களின் பெருக்கெடுப்பின் காரணமாக நெற்செய்கையில் அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட்டிருந்தன.

இந்நிலையில் தற்போது நெற்பயிரில் ஏற்பட்டுள்ள கபில நிறத்தத்திகளின் தாக்கம் மேலும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகின்றது. 

2018 ஆம் ஆண்டு அம்பாறை மாவட்டத்தின் உகன பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த சிறு போக நெற்செய்கையின் போது பத்தாயிரம் ஏக்கர் நெல் வயல் கபில நிறத்தத்திகளின் தாக்கத்தினால் முற்றாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

(அம்பாறை சுழற்சி நிருபர்)


Add new comment

Or log in with...