Thursday, May 2, 2024
Home » ஜம்மு – காஷ்மீர் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கும் பாகிஸ்தான்

ஜம்மு – காஷ்மீர் இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பை நிராகரிக்கும் பாகிஸ்தான்

- பாகிஸ்தான் தூதரகம் அறிக்கை வெளியீடு

by Rizwan Segu Mohideen
December 14, 2023 6:10 pm 0 comment

இந்தியாவினால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் குறித்து இந்திய உச்ச நீதிமன்றம் அறிவித்த தீர்ப்பை பாகிஸ்தான் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளது.

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஜம்மு மற்றும் காஷ்மீர் சர்ச்சை என்பது ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் சர்வதேச அளவில் அறியப்பட்ட ஒரு சர்ச்சையாகும். ஜம்மு மற்றும் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வானது ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களின் படியும்,காஷ்மீர் மக்களின் அபிலாஷைகளின் படியும் நிறைவேற்றப்பட வேண்டும். காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் மக்களின் விருப்பத்திற்கு எதிராக இந்த சர்ச்சைக்குரிய பிரதேசத்தின் தீர்வு குறித்து ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்க இந்தியாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

ஜம்மு மற்றும் காஷ்மீர் மீதான இந்திய அரசியலமைப்பின் மேலாதிக்கத்தை பாகிஸ்தான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு ஏற்ப வழங்கப்பட்ட இந்த தீர்ப்புக்கு எவ்வித சட்ட மதிப்பும் இல்லை.

உள்நாட்டு சட்டங்கள் மற்றும் நீதித்துறை தீர்ப்புக்கள் என்ற போர்வையில் இந்தியா தனது சர்வதேச கடமைகளை கைவிட முடியாது. இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரை இணைக்கும் அதன் திட்டங்கள் தோல்வியிலேயே முடியும்.

ஆகஸ்ட் 5, 2019 அன்று இந்தியாவின் ஒருதலைப்பட்சமான மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு நீதித்துறை ஒப்புதல் அளித்திருப்பது திரிபுபடுத்தப்பட்ட வரலாற்று மற்றும் சட்ட வாதங்களை அடிப்படையாகக் கொண்ட நீதியின் கேலிக்கூத்தாகும்.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது, சர்வதேச அளவில் அறியப்பட்ட சர்ச்சைக்குரிய ஜம்மு காஷ்மீர் பிரச்சனையின் தன்மையை சரியாக புரிந்து கொள்ள தவறி உள்ளது. மேலும், ஆகஸ்ட் 5, 2019 இல் இந்தியாவின் சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளை ஏற்கனவே நிராகரித்துள்ள காஷ்மீர் மக்களின் அபிலாஷைகள் என்ன என்பதனையும் புரிந்து கொள்ள தவறி உள்ளது. இந்தத் தீர்ப்பானது, இந்தியாவின் தற்போதைய கீழ்த்தரமான நீதித்துறையின் மற்றொரு வெளிப்பாடாகும்.

மாநில அந்தஸ்தை மீள்வழங்குதல், மாநில சட்டமன்றத் தேர்தல்களை நடத்துதல் அல்லது இது போன்ற நடவடிக்கைகள், காஷ்மீர் மக்களுக்களுக்கான சுயநிர்ணய உரிமையை வழங்குதற்கு ஈடாக ஒருபோதும் இருக்காது.

மேலும், இந்த தீர்ப்பானது, இந்தியாவினால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீரில் நிகழ்த்தப்படும் ஒட்டு மொத்த மனித உரிமை மீறல்களில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்பவும் முடியாது.

ஓகஸ்ட் 5, 2019 முதல் இந்தியாவின் ஒருதலைப்பட்ச மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளானது, ஜம்மு மற்றும் காஷ்மீரின் மக்கள்தொகை அமைப்பு மற்றும் அரசியல் நிலப்பரப்பை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இது சர்வதேச சட்டம் மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை குறிப்பாக தீர்மானம் 122 (1957) ஆகியவற்றை அப்பட்டமாக மீறும் செயலாகும். காஷ்மீரிகளை தங்கள் சொந்த நிலத்தில் அதிகாரம் இழந்த சமூகமாக மாற்றுவதே இந்தியாவின் நோக்கமாக இருப்பதால், பாகிஸ்தான் இவ்விடயத்தை மிகவும் கரிசனையுடன் உற்றுநோக்குகிறது. அமைதி மற்றும் பேச்சுவார்த்தைக்கான சூழலை தடுக்கும் இந்தியாவின் இவ்வகையான நடவடிக்கைகள் தடை செய்யப்பட வேண்டும்.

இந்தியாவினால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை நனவாக்க பாகிஸ்தான் தனது முழு அரசியல், இராஜதந்திர மற்றும் தார்மீக ஆதரவை தொடர்ந்து வழங்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT