Saturday, May 4, 2024
Home » பங்களாதேஷ் அணியை கடுமையாக சாடிய மத்தியூஸ் வீடியோ ஆதாரமும் வெளியிட்டார்
‘டைம் அவுட்’ விவகாரம்:

பங்களாதேஷ் அணியை கடுமையாக சாடிய மத்தியூஸ் வீடியோ ஆதாரமும் வெளியிட்டார்

by mahesh
November 8, 2023 6:18 am 0 comment

சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக டைம் அவுட் முறையில் ஆட்டமிழந்த அஞ்சலோ மத்தியூஸ், பங்களாதேஷுக்கு எதிரான போட்டிக்கு பின்னரான ஊடக சந்திப்பில் தனது கோபத்தை வெளியிட்டதோடு, பங்களாதேஷின் செயல் ‘வெட்ககரமானது’ என்றார்.

மத்தியூஸின் சர்ச்சைக்குரிய ஆட்டமிழப்புக்கு மத்தியில் டெல்லியில் நேற்று முன்தினம் (06) நடந்த இந்தப் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுகளால் தோல்வியை சந்தித்து உலகக் கிண்ண அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.

தனது 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் இத்தனை கீழ் நிலைக்குச் சென்ற அணி ஒன்றையும் வீரர் ஒருவரையும் கண்டதில்லை என்று மத்தியூஸ் குறிப்பிட்டார். மத்தியூஸ் துடுப்பெடுத்தாட மைதானத்திற்கு வந்து தயாரான நிலையிலேயே தலைக்கசவத்தை மாற்ற முயன்றார். அப்போதே பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசன் ஆட்டமிழப்புக் கோரினார்.

“நான் எந்தத் தவறும் செய்யவில்லை. இரண்டு நிமிடங்களில் நான் மைதானத்திற்கு வந்து தயாராகிவிட்டேன். அதன் பின்னரே உபகரணம் செயலிழந்திருந்தது. பொதுப் புத்தி எங்கே போனது என்று எனக்குத் தெரியவில்லை. ஷகீப் மற்றும் பங்களாதேஷ் இப்படி கிரிக்கெட் விளையாட விரும்பினால் வெட்ககரமானது. இப்படி கீழ் நிலைக்குச் செல்வது தவறானது” என்று மத்தியூஸ் தெரிவித்தார்.

ஐ.சி.சி. போட்டி விதியின்படி துடுப்பாட்ட வீரர் ஒருவர் ஆட்டமிழந்த பின் அடுத்து வரும் துடுப்பாட்ட வீரர் இரண்டு நிமிடங்களுக்குள் துடுப்பெடுத்தாட தயாராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“எனது தலைக்கவசம் உடைந்த பின் இன்னும் ஐந்து விநாடிகள் இருந்தன. நான் மான்கடிங் அல்லது களத்தடுப்பாளரை இடையூறு செய்தது பற்றி பேசவில்லை. நான் பொதுப் புத்தி பற்றி பேசுகிறேன். இது உண்மையில் வெட்ககரமானது” என்றார்.

இந்த சம்பவம் குறித்து பங்களாதேஷ் அணித் தலைவர் ஷகீப் அல் ஹசனிடம் கேட்டபோது, தமக்கு அவரை 19 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட்டில் ஆடியது தொடக்கம் தெரியும் என்றும் போட்டி விதிக்கு அமையவே முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும் வலியுறுத்தினார்.

எனினும் தனது சம்பவம் இரண்டு நிமிடங்களுக்குள்ளேயே இடம்பெற்றதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் மத்தியூஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் மத்தியூஸ் தனது கூற்றை நிரூபிக்கும் வீடியோ ஆதாரத்தை ட்விட்டர் சமூகதளத்தில் வெளியிட்டதோடு, நான்காவது நடுவரே தவறு என்று குறிப்பிட்டுள்ளார்.

“இங்கே 4ஆவது நடுவரே தவறு! (மாற்று) தலைக்கவசத்தை கொடுத்த பின்னரும் கூட எனக்கு இன்னும் 5 விநாடிகள் இருந்தன! இதனை 4ஆவது நடுவரால் தெளிவுபடுத்த முடியுமா? அதாவது, பாதுகாப்பு முக்கியம் என்பதால் தலைக்கவசம் இன்றி பந்துவீச்சாளரை எதிர்கொள்ள முடியாது என்ற அர்த்தத்திலேயே நான் கூறுகிறேன்” என்று மத்தியூஸ் சர்வதேச கிரிக்கெட் கெளன்சிலுக்கு பதிலளிக்கும் வகையில் தனது ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஆதாரத்தில் சதீர சமரவிக்ரம ஆட்டமிழப்பது மற்றும் மத்தியூஸ் மாற்று தலைக்கவசத்தை அணியும் காட்சிகள் உள்ளதோடு அந்த இரண்டு நிகழ்வுகளுக்கும் இடையிலான கால இடைவெளி ஒரு நிமிடம் மற்றும் 55 விநாடிகளாகவே பதிவாகியுள்ளது.


கை கொடுக்க மறுப்பு

பங்களாதேஷ் வெற்றி ஓட்டத்தை பெற்ற விரைவில் இலங்கை வீரர்கள் நடுவருக்கு மாத்திரம் கைலாகு கொடுத்துவிட்டு மைதானத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் பங்களாதேஷ் வீரர்களுக்கு கைலாகு கொடுக்க மறுத்தனர்.

மத்தியூஸின் டைம் அவுட் ஆட்டமிழப்புக்குப் பின்னர் இரு அணி வீரர்கள் இடையிலும் மைதானத்தில் சில சந்தர்ப்பங்களில் முறுகல் ஏற்பட்டதை காண முடிந்தது.

குறிப்பாக ஷகீப் துடுப்பெடுத்தாட வந்தபோது அவரை கோபத்தோடு வரவேற்ற மத்தியூஸ் அவரை ஆட்டமிழக்கச் செய்த பின் மணிக்கட்டை காண்பித்து நேரம் முடிந்துவிட்டது என்று செய்கை செய்தார்.

போட்டி முடிந்தபோதும் இந்த நிலை நீடித்தது. போட்டி முடிவுக்குப் பின் வழக்கமாக இரு அணிகளும் வரிசையில் நின்று கைலாகு கொடுத்துக்கொள்வார்கள் என்றபோதும் இந்தப் போட்டியில் அது நிகழவில்லை. இரு அணிகளின் பயிற்சியாளர்கள் மற்றும் உதவியாளர்களே பரஸ்பரம் கைலாகு கொடுத்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT