Tuesday, May 7, 2024
Home » உலகக் கிண்ணத்தில் 10 அணிகளுக்கும் தொடர்ந்தும் அரையிறுதிக்கான வாய்ப்பு

உலகக் கிண்ணத்தில் 10 அணிகளுக்கும் தொடர்ந்தும் அரையிறுதிக்கான வாய்ப்பு

by sachintha
October 31, 2023 6:11 am 0 comment

உலகக் கிண்ணத்தில் இந்திய அணி இதுவரை ஆடிய 6 போட்டிகளிலும் வென்று 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தபோதும் அந்த அணி இன்னும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யவில்லை என்பதோடு நடப்புச் சம்பியன் இங்கிலாந்து 6 போட்டிகளில் 5இல் தோற்று 2 புள்ளிகளோடு கடைசி இடத்தில் இருந்தபோதும் இன்னும் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழக்கவில்லை.

எனினும் இதுவரை நடந்த போட்டிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களை பிடித்திருக்கும் இந்தியாவுடன், தென்னாபிரிக்கா (10 புள்ளிகள்), நியூசிலாந்து (8 புள்ளிகள்) மற்றும் அவுஸ்திரேலிய (8 புள்ளிகள்) அணிகளுக்கு அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதேபோன்று இலங்கை அணிக்கும் அரையிறுதிக்கான வாய்ப்பு தொடர்ந்து பிரகாசமாகவே உள்ளது. இலங்கை அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு எஞ்சியிருக்கும் அனைத்துப் போட்டிகளில் வெற்றிபெறுவது அவசியம் என்றபோதும் மற்ற போட்டிகளின் முடிவுகளும் இலங்கையின் வாய்ப்பை அதிகரிப்பதாக இருக்கும்.

குறிப்பாக அவுஸ்திரேலியாவிடம் தோற்ற நியூசிலாந்து அணி எஞ்சி இருக்கும் மூன்று போட்டிகளில் தென்னாபிரிக்கா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளை சந்திக்கவுள்ளது. இந்த மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து தோற்றால் இலங்கை ஏஞ்சிய போட்டிகளில் இரண்டில் வென்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய முடியுமாக இருக்கும்.

இலங்கை அணி எஞ்சிய போட்டிகளில் இந்தியா (நவம்பர் 2), பங்களாதேஷ் (நவம்பர் 6) மற்றும் நியூசிலாந்து (நவம்பர் 9) அணிகளை எதிர்கொள்ளவுள்ளது. எனினும் அவுஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பு அதிகரித்துள்ளது. அந்த அணி எஞ்சிய போட்டிகளில் சோபிக்கத் தவறிவரும் இங்கிலாந்து மற்றும் பலமில்லாத ஆப்கான், பங்களாதேஷ் அணிகளையே எதிர்கொள்ளவுள்ளது. எனினும் அரையிறுதிப் போட்டியை உறுதி செய்வதற்கு அந்த அணி மூன்று போட்டிகளிலும் வெல்வது அவசியமாக உள்ளது.

எனினும் முதலிடத்தில் இருக்கும் இந்திய தனது எஞ்சிய மூன்று போட்டிகளில் ஒன்றில் வெற்றி பெற்றால் அரையிறுதியை உறுதி செய்யும் என்பதோடு அடுத்த இடத்தில் இருக்கும் தென்னாபிரிக்கா தனது எஞ்சிய மூன்று போட்டிகளில் இரண்டில் வெற்றி பெற வேண்டும்.

பாகிஸ்தான் அணி தற்போது 4 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தில் இருக்கும் நிலையில் அந்த அணி எஞ்சிய மூன்று போட்டிகளில் குறைந்தது இரண்டில் வெற்றியீட்டி அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் எஞ்சிய மூன்று போட்டிகளிலும் தோற்கும் பட்சத்தில் நிகர ஓட்ட வேகத்திலும் முன்னேற்றம் கண்டால் அரையிறுதிக்கு முன்னேற முடியும்.

புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி தனது நிகர ஓட்ட விகிதத்தையும் அதிரடியாக அதிகரித்து எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று மற்ற போட்டிகளின் முடிவு தமக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் அரையிறுதிக்கு முன்னேற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT