Home » காட்டு யானை அட்டகாசம்; மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சேதம்

காட்டு யானை அட்டகாசம்; மக்களின் குடியிருப்பு பகுதிகளுக்கு சேதம்

by Prashahini
October 13, 2023 4:03 pm 0 comment

புத்தளம் – தில்லையடி பகுதியிலுள்ள மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் காட்டு யானையொன்று இன்று(13) அதிகாலை வேளையில் உட்புகுந்து பல்வேறான சேதங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மதுரகம பகுதியிலிருந்து தில்லையடி மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் குறித்த காட்டு யானை உள்நுழைந்துள்ளதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.

இன்று (13) அதிகாலை 5.20 மணியளவில் உட்புகுந்த இக்காட்டு யானை, மக்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரவேசித்து வீட்டு மதில்கள், வீட்டின் பிரதான வாயில் கதவுகள், சுவர்கள் என்பனவற்றுக்கு கடுமையான சேதங்களையும் உண்டுபண்ணியுள்ளதுடன், வேலிகள் சிலவற்றையும் நாசம் செய்துள்ளது.

இது தவிர, பயன்தரும் மரங்கள் உள்ளிட்ட மரம், செடி, கொடிகள் பலவற்றையும் குறித்த காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.

இவ்வாறு பல சேதங்களை ஏற்படுத்திய காட்டு யானை, மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்து வீதியில் அங்கும் இங்குமாக நடமாடித் திரிந்தமையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, வீதியில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த குறித்த காட்டு யானை, தில்லையடிப் பகுதியில் காலை வேளையில் பேக்கரி உற்பத்திகளை விற்பனை செய்வதற்காக வருகை தந்த முச்சக்கர வண்டி ஒன்றையும் தாக்கி, வீதியில் கவிழ்த்தியுள்ளது. எனினும், குறித்த முச்சக்கர வண்டியின் சாரதி சிறு காயங்களுடன் மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த காட்டு யானையை பிரதேச இளைஞர்களும், பொதுமக்களும் இணைந்து விரட்டியடித்த போதிலும் பல மணித்தியாலங்களின் பின்னரே அந்த யானை தில்லையடி பகுதியை விட்டு, குட்செட், குருநாகல் வீதியூடாக வில்லுகுளம் பகுதியை நோக்கி சென்றதாகவும் மக்கள் குறிப்பிட்டனர்.

மேற்படி காட்டு யானையை விரட்டியடிக்கும் நடவடிக்கைகளில் புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த காட்டு யானையால் தில்லையடி மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து ஏற்படுத்திய சேதங்களை பார்வையிட்ட புத்தளம் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சேத விபரங்களையும் திரட்டினர். என்றும் இல்லாதவாறு காட்டு யானை தில்லையடி மக்கள் குடியிருப்புக்குள் உள் புகுந்தமையால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT