– கிழக்கு, ஊவா உள்ளிட்ட பல பகுதிகளில் 100-150 மி.மீ. மழை
– அவ்வப்போது 30-40- கி.மீ. பலத்த காற்று
தற்போது தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமொன்று உருவாகியுள்ளது. இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து மேற்கு திசை சார்ந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து நாளையதினம் (25) அளவில் தென்மேற்கு வங்காள விரிகுடா கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.
இந்த தொகுதி தொடர்ச்சியாக வலுவடைந்து இலங்கையின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படலாம்.
இன்றையதினம் (24) நாட்டின் வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளையில் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.
கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் சில இடங்களில் 150 மி.மீ. இற்கும் அதிக கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடமத்திய மாகாணத்தின் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கி.மீ. வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.