இந்தியாவின் அசாம் மாநிலத்தில் 27 ஆயிரம் கோடி ரூபா முதலீட்டில் குறைகடத்தி உற்பத்திக்கான பாரிய தொழிற்சாலையொன்று அமைக்கப்பட உள்ளது.
இது தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் அசாம் மாநில பிரதம செயலாளர் ரவி கோட்டா தலைமையில் நடாத்தப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் கைத்தொழில் துறை, பொது சுகாதாரப் பொறியியல், மின்சாரத் திணைக்களம் மற்றும் குவாஹாட்டி மாநகர அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளும் டாடா எலக்ட்ரொனிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயற்பாட்டு பணிப்பாளர் கலாநிதி ரந்தீர் தாகுர் ஆகியோர் பங்குபற்றியுள்ளனர்.
இத்தொழிற்சாலைத் திட்டம் குறித்து முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா குறிப்பிடுகையில், அசாம், ஜாகிரோட்டில் டாடா குழுமத்தின் முதலீட்டுடன் இந்த தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. மின்சார வாகனங்கள் உள்ளிட்ட ஏனைய வாகனங்கள், தொலைத்தொடர்பு சாதனைங்கள் மற்றும் பாவனையாளர் இலத்திரனியல் பொருட்கள் என்பவற்றுக்கு பயன்படுத்தப்படக்கூடிய குறைகடத்திகள் இங்கு உற்பத்தி செய்யப்பட இருக்கிறது.
நாளொன்றுக்கு 48 மில்லியன் குறைகடத்திகளை இத்தொழிற்சாலையின் ஊடாக உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுவதால் 61 மூலப்பொருட்களை விநியோகிப்பதற்கு ஏற்ப 150 விநியோகஸ்தர்கள் பயன்படுத்தவிருக்கின்றனர்.
எதிர்வரும் ஆண்டின் (2025) நடுப்பகுதியில் இத்தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. அதனால் இத்தொழிற்சாலை அசாம் கைத்தொழில் துறையின் முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை அளிக்கும். குறிப்பாக புதிய தொழில்வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.