ஊழல் வழக்கில் ஜாமீன் பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், போராட்ட வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் இப்போதைக்கு விடுதலையாக வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு உட்பட ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதனால் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் தலைவர்களுக்கு வெளிநாட்டு தலைவர்கள் அளிக்கும் பரிசு எல்லாம் அரசு கருவூலத்துக்கு சென்று விடும். அவ்வாறு வழங்கப்பட்ட விலை உயர்ந்த ஆபரணம் ஒன்றை, இம்ரான் கான் பிரதமராக இருந்தபோது அரசு கருவூலத்துக்கு குறைந்த பணம் செலுத்தி முறைகேடான வழியில் எடுத்துக் கொண்டதாக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் இம்ரான் கானுக்கு பிணை வழங்கியது.
இந்த ஜாமீன் கிடைத்த சில மணி நேரத்தில், தீவிரவாதம் மற்றும் இதர வழக்குகளில் இம்ரான் கானை ராவல்பிண்டி பொலிஸார் கைது செய்தனர். ராவல்பிண்டியில் உள்ள அடியலா சிறையில் இம்ரான் கான் இருந்தபோது, கடந்த செப்டம்பர் 28ஆம் திகதி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் இம்ரான் கான் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். தீவிரவாத தடுப்பு சட்ட விதிமுறை மீறல், அரசு தடையை மீறி பொது இடத்தில் கூடுதல், பொலிஸாரை கடமையை செய்யவிடாமல் தடுத்தது, பொலிஸ் வாகனங்கள் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியது என பல குற்றச்சாட்டுகள் இந்த வழக்கில் இம்ரான் கான் மீது சுமத்தப்பட்டுள்ளன. இந்த வழக்கில் இம்ரான் கைது செய்யப்படுவதற்கு முன்பே, பேட்டியளித்த பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர். கடந்த மே மாதம் நடைபெற்ற வன்முறை தொடர்பாக 8 வழக்குகள் இம்ரான் கான் மீது உள்ளன. இந்த வழக்குகளில் பிணை பெற்றால் மட்டுமே அவரால் வெளிவர முடியும் என கருத்து தெரிவித்திருந்தார்.