Sunday, November 24, 2024
Home » பிரதமர் மோடியை தொடர்புபடுத்திய ஊடக செய்திக்கு கனடா அரசு மறுப்பு
நிஜ்ஜார் கொலை:

பிரதமர் மோடியை தொடர்புபடுத்திய ஊடக செய்திக்கு கனடா அரசு மறுப்பு

by sachintha
November 23, 2024 10:28 am 0 comment

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை பற்றி பிரதமர் மோடி அறிந்திருந்தார் என்று கனடா ஊடகம் செய்தி வெளியிட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த ஊடகச் செய்தியை கனடா அரசு மறுத்துள்ளது.

முன்னதாக, நிஜ்ஜாரை கொலை செய்ய இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமித் ஷா சதி திட்டம் தீட்டியதாக கூறி பெயர் வெளியிடாமல் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி கனடா ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

மேலும் அந்தச் செய்திகளில், “நிஜ்ஜார் கொலை சதி பற்றி இந்திய பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்குத் தெரியும். என்றாலும், இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் ஆதாரம் எதுவும் கனடா அரசிடம் இல்லை.” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து கனடா அரசு நேற்று (நவ.22) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அக்டோபர் 14 அன்று, பொது பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க மற்றும் தொடர்ந்து அச்சுறுத்தல் ஏற்பட்டதால், ரோயல் கனேடியன் மவுன்டன் பொலிஸ் (ஆர்சிஎம்பி) மற்றும் அதன் அதிகாரிகள், கனடாவில் நிகழ்த்தப்பட்ட கடுமையான குற்றச் செயல்கள் குறித்து இந்திய அரசின் முகவர்களுக்கு தொடர்பு உண்டு என்ற பொது குற்றச்சாட்டினை முன்வைக்கும் அசாதாரண நடவடிக்கை எடுத்தது.

பிரதமர் மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், அஜித் தோவல் ஆகியோரை கனடாவுக்குள் நடந்த குற்றச் செயல்களுடன் தொடர்பு படுத்துவது குறித்து கனடா அரசு எதுவும் கூறவில்லை. அதற்கு ஆதாரங்களும் இல்லை. மற்றபடி ஊடகங்களில் வெளியான தகவல்கள் ஊகமானது, தவறானது.” என்று தெரிவித்துள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரேயில் உள்ள ஒரு குருத்துவாராவுக்கு வெளியே வைத்து நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தக் கொலை தொடர்பாக இந்த ஆண்டின் ஆரம்பத்தில் நான்கு இந்தியர்கள் மீது குற்றம்சாட்டி, கனடா அதிகாரிகள் அவர்களைக் கைது செய்தனர். கனடா ஊடகங்களின் செய்திகளை கேலிக்குரியது எனக்கூறி ஆவேசமாக இந்தியா நிகராரித்திருந்தது, இதுபோன்ற செயல்கள் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் இருநாட்டு உறவுகளை மேலும் பாதிக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும் இந்தக் குற்றச்சாட்டு அபத்தமானது மற்றும் உள்நோக்கம் கொண்டது என்று தெரிவித்தது. காலிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளுக்கு கனடா ஆதரவு தருவதாகவும் குற்றம்சாட்டி வருகிறது. இதனிடையே, கனடாவிலிருந்து இந்தியாவுக்கு செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் ஸ்கிரீனிங் நடவடிக்கைகளை கனடா அரசு திரும்ப பெற்றிருப்பதாக சிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. நிஜ்ஜார் கொலை தொடர்பாக கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. என்றாலும் புதிய நெறிமுறைகளை நீக்குவதற்கான காரணங்களை கனடா அரசு தெரிவிக்கவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT