காசாவில் நேற்று (22) காலை தொடக்கம் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 25 பலஸ்தீன்கள் கொல்லப்பட்டிருப்பதோடு லெபனானிலும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடித்தன.
எகிப்து எல்லையை ஒட்டிய தெற்கு காசா நகரான ரபாவின் கிர்பட் அல் அதாஸ் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை தொடர்ந்து இரண்டு சடங்கள் மீட்கப்பட்டதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்கட்டி செய்தி வெளியாகியுள்ளது.
தெற்கு நகரான கான் யூனிஸின் அல் மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் வசிக்கும் கூடாரங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்திய குண்டுவீச்சில் காயமடைந்த ஒருவர் உயிரிழந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
அதேபோன்று வடக்கு காசாவின் சப்தாவி பகுதியில் தமது வீடுகளுக்குச் செல்ல முயன்ற பொதுமக்கள் மீது இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். வடக்கே ஜபலியா அல் நஸ்லா சிறு நகரில் இஸ்ரேலிய ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதல்களில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
காசா நகரின் கிழக்கே சுஜையா பகுதியில் அபூ அஸ்மர் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டை இலக்கு வைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் நேற்று நடத்திய தாக்குதலில் எட்டுப் போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. காசா நகரில் அல் நாசர் பகுதியில் இடம்பெற்ற இஸ்ரேலிய செல் வீச்சு ஒன்றில் மேலும் மூன்று பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதேவேளை கான் யூனிஸின் மேற்கே உள்ள மவாசி அல் கராரி பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் கூடாரம் ஒன்றை இலக்கு வைத்து இடம்பெற்ற தாக்குதலில் தாய் மற்றும் குழந்தை கொல்லப்பட்டு தந்தை படுகாயம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
மத்திய காசாவின் டெயிர் அல் பலா நகரின் மேற்கே அபூ சம்பரா குடும்பத்தின் வீட்டின் மீது இடம்பெற்ற இஸ்ரேலிய வான் தாக்குதலில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசாவில் கடந்த ஓர் ஆண்டுக்கு மேலாக இஸ்ரேல் பயங்கரத் தாக்குதல் நடத்திவரும் நிலையில் போர் குற்றச்சாட்டில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து அதே உக்கிரத்துடன் இடம்பெற்று வருகின்றன.
இந்தத் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 44,000 ஐ தாண்டி இருப்பதோடு ஒரு இலட்சத்திற்கு அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர் கொல்லப்பட்டவர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என்பதை ஐக்கிய நாடுகள் சபை உறுதி செய்துள்ளது.
மறுபுறம் காசா போரை ஒட்டி லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே முழு அளவில் போர் வெடித்திருக்கும் சூழலில் அங்கு கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
தெற்கு லெபனான் நகரான டெயிர் கனூன் மீது இடம்பெற்ற இஸ்ரேலின் வான் தாக்குதல்களில் இருவர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக தெற்கு நகரங்களில் இஸ்ரேலின் தாக்குதல் தீவிரம் அடைந்திருந்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
காசா மக்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கெட் தாக்குதல்களை நடத்திய நிலையில் கடந்த ஓர் ஆண்டாக பரஸ்பரம் மோதல் நீடித்ததோடு கடந்த செப்டெம்பர் தொடக்கம் லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தியதும்.
லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 3,583 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 15,244 பேர் காயமடைந்துள்ளனர்.