ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் மேற்கத்திய நாடுகளுக்குக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைனின் கிழக்கே உள்ள டினிப்ரோ நகர் மீது ரஷ்யா புதிய அதிவேக மத்திய தூர ஏவுகணையைப் பாய்ச்சியது. அமெரிக்காவும் பிரிட்டனும் வழங்கிய ஏவுகணைகளை உக்ரைன் ரஷ்யாவுக்குள் ஏவியதற்குப் பதிலடி அந்தத் தாக்குதல் என்று புட்டின் கூறினார்.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் கொடுத்து உதவும் நாடுகள் மீதும் ரஷ்யா அத்தகைய தாக்குதலை நடத்தலாம் என்றார் அவர்.
இந்த புதியவகை ஹைப்பர்சோனிக் ஏவுகணை மாக் 10 வேகத்தில் செல்லக்கூடியதால் மேற்கு நாடுகளின் வான் எதிர்ப்பு ஆயுதங்களால் இடைமறித்துச் சுட்டு வீழ்த்த முடியாதது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது ஒரு பரீட்சார்த்த தாக்குதல் என்றும் ஏற்கனவே இந்த ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த இராணுவ இலக்குகள் குறிவைக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் உறுதி செய்தார். அத்துடன் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் பொதுமக்கள் அங்கிருந்து வெளியேற எச்சரிக்கை வழங்கப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘ரஷ்யாவுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் நாடுகளின் இராணுவ வசதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு உரிமை உண்டு. சர்வதேச பாதுகாப்பு அமைப்பை அழிப்பது ரஷ்யா அல்ல, அமெரிக்கா தான் என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்த விரும்புகிறேன்’ என்றும் புடின் குறிப்பிட்டுள்ளார். இந்த மத்திய தூர ஏவுகணைகள் பொதுவாக 3,000 முதல் 5,500 கி.மீ. வரை சென்று தாக்குதல் நடத்தக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா ஏவியது கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையைப் போல் இருப்பதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கி கூறியிருந்தார். ஆனால், அப்படி இருக்க வாய்ப்பில்லை என்று மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் கருதுகின்றனர்.