தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக தலைமை பயிற்சியாளர் சனத் ஜயசூரிய உட்பட இலங்கை அணியின் எஞ்சிய வீரர்கள் நேற்று முன்தினம் (21) தென்னாபிரிக்காவை நோக்கி புறப்பட்டுச் சென்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் நிறைவடைந்த நிலையில் அதில் பங்கேற்று டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்ற பதும் நிசங்க, சதீர சமரவிக்ர, கமிந்து மெண்டிஸ் ஆகிய வீரர்கள் தென்னாபிரிக்கா சென்று அங்கு ஏற்கனவே பயிற்சிகளில் ஈடுபட்டு வரும் இலங்கை வீரர்களுடன் இணையவுள்ளனர்.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் இடம்பெற்ற தனஞ்சய டி சில்வா, திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மத்தியூஸ், தினேஷ் சந்திமால், லஹிரு குமார, பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், மிலான் ரத்னாயக்க, கசுன் ராஜித்த, லசித் எம்புல்தெனிய ஆகிய வீரர்கள் கடந்த நவம்பர் 11 ஆம் திகதியே தென்னாபிரிக்கா புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் இலங்கை அணியின் பயிற்சி ஆலோசகராக தென்னாபிரிக்க தொடருக்காக நியமிக்கப்பட்டிருக்கும் தென்னாபிரிக்க முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீல் மக்கன்சியில் கீழ் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பன், கிங்ஸ்மீட் மைதானத்தில் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 1 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இரு அணிகளும் ஆடும் இரண்டாவது டெஸ்ட் போட்டி கிபர்ஹா, செயின்ட் ஜோர்ஜஸ் பார்க் மைதானத்தில் டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகும்.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கைக்கு வாய்ப்பு இருக்கும் சூழலில் இந்த டெஸ்ட் தொடரில் வெல்வது அவசியமாகும்.