இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) தொடரின் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.
ஐ.பி.எல். தொடர் நெருங்கும்போது ஓர் ஆண்டுக்கான அட்டவணையை வெளியிடும் வழக்கத்தில் இருந்து விலகியே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன்படி 2025 ஐ.பி.எல். தொடர் எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி ஆரம்பித்து மே 25 ஆம் திகதி நிறைவடையவுள்ளது.
அதேபோன்று 2026 மற்றும் 2027 பருவத்தின் ஐ.பி.எல். தொடர்களுக்கான திகதிகளையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை இறுதி செய்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் அட்டவணையில் ஐ.பி.எல். முக்கிய போட்டி தொடராக நிறுவப்பட்டிருப்பதை காண்பிப்பதாகவே முன்கூட்டியே அட்டவணைகள் வெளியாகி இருப்பது அவதானிக்கப்படுகிறது. இதில் 2026 ஐ.பி.எல். தொடர் மார்ச் 15 தொடக்கம் மே 31 வரை நடைபெறவிருப்பதோடு 2027 இல் மார்ச் 14 மற்றும் மே 30 ஆம் திகதிக்கு இடையே ஐ.பி.எல். போட்டிகள் நடைபெறவுள்ளன.
அடுத்த ஆண்டு தொடரும் கடந்த மூன்று பருவங்கள் போன்று மொத்தம் 74 போட்டிகளைக் கொண்டுள்ளது. இது 2022இல் இடம்பெற்ற 84 போட்டிகளை விடவும் பத்துப் போட்டிகள் குறைவாகும். 202-3-27 பருவத்திற்கான ஊடக உரிமை விற்கப்பட்டதை அடுத்தே போட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் ஆடும் பெரும்பாலான முழு அங்கத்துவ நாடுகளைக் சேர்ந்த வீரர்கள் அடுத்த மூன்று பருவத்திலும் பங்கேற்பதற்கு அந்தந்த கிரிக்கெட் சபைகளிடம் இருந்து ஒப்புதல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இதில் 2008 இல் முதலாவது ஐ.பி.எல். பருவம் தொடக்கம் அரசியல் இழுபறி காரணமாக இந்தத் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்காத நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் சபை இதில் உள்ளடங்கவில்லை.
இதில் அவுஸ்திரேலிய வீரர்கள் அனைவருக்கும் அந்நாட்டு கிரிக்கெட் சபை அனுமதி அளித்திருக்கும் அதேநேரம் இங்கிலாந்து தனது 18 வீரர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அடுத்த மூன்று ஐ.பி.எல். தொடருக்கும் 13 வீரர்களுக்கு அனுமதி அளித்திருப்பதோடு தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், ஆப்கானிஸ்தான், சிம்பாப்வே அணியின் முழு வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை கிரிக்கெட் சபையும் 2025 ஐ.பி.எல். பருவத்தில் தமது வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது. அதேபோன்று 2026 மற்றும் 2027 பருவத்தில் ஐ.பி.எல். இல் இடம்பெறும் வீரர்களை அனுமதிப்பதாக அது குறிப்பிட்டுள்ளது. அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். தொடருக்கு இலங்கையின் இளம் வீரர் மதீஷ பதிரண மாத்திரமே சென்னை சுப்பர் கிங்ஸ் அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார். மேலும் 19 இலங்கை வீரர்கள் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் நடைபெறும் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இடம்பெற்றுள்ளனர். இந்த ஏலத்தில் மொத்தம் 574 வீரர்கள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.