நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி, ஆளும் தேசியக் கட்சியான தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியுள்ளது.
தமிழர் பகுதிகளில் தமிழ் தேசியக் கட்சிகள் பின்னடைவை சந்திக்க என்ன காரணம்? இனி தமிழ் தேசியக் கட்சிகளின் எதிர்காலம் என்ன? இலங்கையில் பாரம்பரிய தேசியக் கட்சிகளை முறியடித்து பெருவெற்றி கண்டுள்ள தேசிய மக்கள் சக்தி, தமிழர் பகுதிகளிலும் வெற்றியை ஈட்டியது எப்படி?
தமிழ் தேசியக் கட்சிகளுக்கு பின்னடைவு
இலங்கையில் நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் மொத்தமுள்ள 6 இடங்களில் மூன்று இடங்களை தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. மீதமுள்ள மூன்று இடங்களை இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், சுயேச்சைக் குழு ஆகியவை பகிர்ந்துகொண்டிருக்கின்றன. தமிழரசுக் கட்சி வலுவாக உள்ளதாகக் கருதப்படும் யாழ்ப்பாணத்தில், தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்களைப் பெற்றதும் சுயேச்சையாக ஒருவர் தேர்வானதும், தமிழ் தேசியக் கட்சிகள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல, வன்னி தேர்தல் மாவட்டத்தில் மொத்தமுள்ள ஆறு இடங்களில் தேசிய மக்கள் சக்திக்கு இரு இடங்களும் ஐக்கிய மக்கள் சக்தி, தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீ லங்கா தொழிலாளர் கட்சி ஆகியவை தலா ஒரு இடமும் கிடைத்துள்ளன.
கிழக்கு மாகாணத்தை எடுத்துக்கொண்டால், மட்டக்களப்பு மட்டுமே தமிழ் தேசிய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் முடிவுகளைத் தந்துள்ளது. மொத்தமுள்ள 6 இடங்களில் தமிழரசுக் கட்சிக்கு 3 இடங்களும் தேசிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைத்துள்ளன.
திகாடுமல்ல (அம்பாறை) தேர்தல் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 4 இடங்களும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழரசுக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் கிடைத்துள்ளன. திருகோணமலையில் மொத்தமுள்ள நான்கு இடங்களில் தேசிய மக்கள் சக்திக்கு 2 இடங்களும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் தலா ஒரு இடமும் கிடைத்துள்ளன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் வடக்கிலும் கிழக்கிலும் மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தைத் தவிர்த்த பிற இடங்களில் தேசிய மக்கள் சக்தியே கூடுதல் இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. இதற்கு முந்தைய தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியோ, ஐக்கிய தேசிய கட்சியோ, பொதுஜன பெரமுனவோ தேசிய அளவில் பெரும்பான்மையைப் பெற்றாலும் வடக்கும் கிழக்கும் அந்த பிரதான போக்கிலிருந்து விலகியே இருந்தன. இந்த முறை அந்தப் போக்கு மாறியிருக்கிறது.
1931இல் இலங்கையில் சர்வஜன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே, வடக்கு – கிழக்குப் பகுதிகள் ஒரு அரசியல் தனித்தன்மையுடன் செயல்பட்டுவந்தன. துவக்கத்தில் ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையிலான சமஷ்டி கட்சி (தற்போது இலங்கை தமிழரசுக் கட்சி), 70களுக்குப் பின் தமிழர் விடுதலை கூட்டணி, 2001 இலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு என தமிழ் தேசியக் கட்சிகளே இந்தப் பிராந்தியங்களில் ஆதிக்கம் செலுத்தின. தேர்தல்களில் ஓரிரண்டு ஆசனங்கள் தென்னிலங்கைக் கட்சிகளுக்கும் அவற்றுக்கு ஆதரவான கட்சிகளுக்கும் கிடைத்தாலும், பெரும்பான்மை ஆசனங்கள் தமிழ் தேசியக் கட்சிகளுக்கே கிடைத்தன. வடக்கு – கிழக்கின் அரசியல் முகமாக இந்தக் கட்சிகளே செயல்பட்டுவந்தன. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின் மூலம் முதல் முறையாக இந்தப் போக்கு மாறத் துவங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
வடக்கிலும் கிழக்கிலும் இயங்கிவந்த தமிழ் தேசியக் கட்சிகள் இனப் பிரச்சினைக்கு தீர்வை மையமாகக் கொண்ட அரசியலிலேயே இத்தனை ஆண்டு காலமாக ஈடுபட்டுவந்தன. இனப் பிரச்சினைக்கு எவ்விதத் தீர்வையும் முன்வைக்காத தேசிய மக்கள் சக்திக்கு (என்பிபி) இம்முறை வடக்கிலும் கிழக்கிலும் வாக்குகள் அதிகம் கிடைத்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, சமூக மேம்பாடு – பொருளாதார மேம்பாடு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஒரு அரசியலை நோக்கி வடக்கு நகர்கிறதா என்ற கேள்வியையும் எழுந்திருக்கிறது. ஜனாதிபதி தேர்தலில்கூட, வடக்கு – கிழக்கு மக்கள் அநுரவுக்கு கணிசமாக வாக்குகளை வழங்கவில்லை. ஆனால், இப்போது அது நடந்திருக்கிறது.
சித்தாந்தங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு, அன்றாட வாழ்வு சார்ந்த பிரச்சினைகளைக் கவனிக்க வேண்டிய காலம் வந்துவிட்டதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரான சி.வி.கே. சிவஞானம்.
“இலங்கையில் ஒரு அரசியல் மாற்றம் எற்பட்டுத்தானிருக்கிறது. அதில் மாற்றுக் கருத்து இல்லை. உரிமை சார்ந்த விஷயங்களை பேசும் அதே நேரம், கடந்த 15 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள் என்று மக்கள் கேட்கிறார்கள். வெறும் தத்துவம் பேசிக்கொண்டிருக்கும் காலம் போய்விட்டது. தமிழ் தேசியம் என்று சொல்லிக் கொண்டேயிருப்பது அன்றாடப் பிரச்னைக்கான தீர்வு அல்ல. அது உரிமை சார்ந்த அரசியல் தீர்வு மட்டுமே. இப்போது வாழ்வியல் சேர்ந்த விஷயங்களை கவனிக்க வேண்டிய தேவை வந்திருக்கிறது” என்கிறார் சி.வி.கே.
ஆனால், அரசியல் நோக்கர்களில் ஆரம்பித்து பொதுமக்கள் வரை, தமிழ் தேசியக் கட்சிகளுக்குள் இருந்த பிளவே பின்னடைவுக்கான முக்கிய காரணமாகச் சுட்டிக்காட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில் இருந்த பொதுமக்கள் சிலரிடம் பேசிய போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் இருந்த சச்சரவுகள், ஜனாதிபதியான இரண்டு மாதங்களில் அநுர குமார திஸாநாயக்கவின் செயல்பாடுகளில் ஏற்பட்ட நம்பிக்கை ஆகியவற்றின் காரணமாகவே, தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்ததாகத் தெரிவித்தனர்.
தமிழ் தேசியக் கட்சிகளிடமிருந்த ஒற்றுமையின்மை, தலைமைத்துவ வெற்றிடம் ஆகியவற்றால் ஏற்பட்ட விரக்தியில் தேசிய மக்கள் சக்தியை நோக்கி மக்கள் திரும்பிவிட்டதாகச் சொல்கிறார் அரசியல் விமர்சகர் நிலாந்தன்.
“இது பெரிய தமிழ் தேசியக் கட்சிகளுடைய தவறுகளின் விளைவு. தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, சிறிய தமிழ் தேசிய கட்சிகள் ஒற்றுமை இல்லாமல் இருந்தார்கள். இதன் காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கட்சிகளும் சுயேச்சைகளும் களத்தில் இருந்தன. இதனால், மக்களின் கவனத்தை குவிக்க முடியவில்லை. மக்கள் அவநம்பிக்கையோடு தமிழ் தேசிய அரசியலை பார்த்தார்கள். மேலும், இங்கே ஒரு தலைமைத்துவ வெற்றிடமும் இருக்கிறது. அதனை இந்தக் கட்சிகள் பொருத்தமான விதத்தில் நிரப்பத் தவறிவிட்டன. இதனால் ஏற்பட்ட விரக்தியில் மக்கள் தேசிய மக்கள் சக்தியை நோக்கித் திரும்பினார்கள். ” என்கிறார் நிலாந்தன்.
பலரும் சுட்டிக்காட்டுவதைப் போல, கடந்த சில ஆண்டுகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இலங்கை தமிழரசுக் கட்சியும் பல உள்மோதல்களை எதிர்கொண்டன.
2001-இல் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழரசுக் கட்சி 2004-இல் இந்தக் கூட்டமைப்பில் இணைந்தது. விரைவிலேயே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், அந்த கூட்டமைப்பிலிருந்து விலகியது. இதற்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எஃப். விலகியது. 2012இல் புளொட் கூட்டமைப்பில் இணைந்தது. இதற்குப் பிறகு, தமிழரசுக் கட்சி, டெலோ, புளொட் ஆகியவை இணைந்து ஒரு கூட்டமைப்பாகவே தேர்தலைச் சந்தித்துவந்தன.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஜனவரியில் நடக்கவிருந்த உள்ளூராட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட தமிழரசுக் கட்சி முடிவு செய்தது. இதையடுத்து புளொட்டும் டெலோவும் தனித்துப் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. முடிவில் அவை, கூட்டமைப்பிலிருந்து பிரிந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்துக் கொண்டன. இந்தக் கூட்டணியில் ஈ.பி.ஆர்.எல்.எஃப். (சுரேஷ்), தமிழ்த் தேசியக் கட்சி, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவை இணைந்தன.
கூட்டமைப்பு இப்படி சிதறிப்போன நிலையில், 75 ஆண்டுகால வரலாறு கொண்ட தமிழரசுக் கட்சிக்குள்ளும் பிரச்சினைகள் தலைதூக்கின. கட்சியின் தலைவர் பதவிக்கு 2023ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் எம்.ஏ. சுமந்திரனைப் பின்னுக்குத் தள்ளி, சிவஞானம் சிறிதரன் அதிக வாக்குகளைப் பெற்றார். ஆனால், கட்சியின் ஒரு பிரிவினர் இதனை விரும்பாத நிலையில், கட்சி உறுப்பினர் ஒருவரால் வழக்குத் தொடரப்பட்டு, சிறிதரனின் தேர்வு நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக முன்னைய தலைவர் மாவை சேனாதிராஜா தொடர்ந்து தலைவராகப் பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எம்.ஏ. சுமந்திரன் தரப்பும் சிறிதரன் தரப்பும் மாறிமாறி குற்றச்சாட்டுகளை சுமத்த ஆரம்பித்தனர். எந்த வேட்பாளருக்கு ஆதரவு என்ற குழப்பம்.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. பொது வேட்பாளரை ஆதரிக்கலாம் என்றார் சிறிதரன். ஆனால், அது தொடர்பாக கட்சி முடிவெடுக்கும் முன்பே பொது வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் இறங்கினார் அவர். இது கட்சிக்குள் சிறிதரன் – சுமந்திரன் என ஒரு பெரிய பிளவை ஏற்படுத்தியது. மற்றொரு பக்கம், கட்சியின் தலைவராக இருந்த மாவை சேனாதிராஜா ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொருவரை ஆதரித்து பேட்டிகளை அளித்தார்.
இந்த முறை பாராளுமன்றத் தேர்தல் வந்தபோது, வேட்பாளர் தேர்வு தொடர்பாக பல விவாதங்கள் தமிழரசுக் கட்சிக்குள் எழுந்தன. முடிவில் தமிழரசுக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் கொழும்பு கிளையின் தலைவருமான சட்டத்தரணி கே.வி. தவராசா கட்சியிலிருந்து விலகி சுயேச்சைக் குழுவாக போட்டியிட்டார். இதுவும் வாக்குகளைப் பிரித்தது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசிய கட்சிகளின் சார்பில் வடக்கிலும் கிழக்கிலும் 13 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர். தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் பத்துப் பேரும் அகில இலங்கை தமிழ் காங்கிரசின் சார்பில் இருவரும் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் ஒருவரும் நாடாளுமன்றம் சென்றனர். ஆனால், இந்த முறை தமிழரசு கட்சி சார்பில் 8 பேரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் ஒருவர், தமிழ் காங்கிரஸ் சார்பில் ஒருவர் என 10 பேரே நாடாளுமன்றம் செல்கின்றனர்.
மற்றொரு பக்கம் கடந்த முப்பது ஆண்டுகளாக தேர்தலில் வென்றுவந்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவும் கடந்த தேர்தலில் பெருமளவு விருப்பு வாக்குகளைப் பெற்ற அங்கஜனும் இந்த முறை தோல்வியடைந்துள்ளனர்.
தமிழரசுக் கட்சியைப் பொறுத்தவரை, கூட்டமைப்பில் இருந்தபோது தங்கள் கட்சிக்கு ஆறு இடங்களே கிடைத்த நிலையில் தற்போது எட்டு இடங்களைக் கைப்பற்றியதால் இதனைப் பின்னடைவாகப் பார்க்க முடியாது என்கிறது அக்கட்சி.
ஆனால். இப்போது வடக்கில் நடந்திருப்பது ஒரு வரலாற்று மாற்றம் என்கிறார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி அகிலன் கதிர்காமர்.
“இது ஒரு வரலாற்று ரீதியான மாற்றம். வடக்கில் உள்ள இரு தேர்தல் மாவட்டங்களிலும் ஒரு தேசியக் கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. உள்நாட்டு யுத்தம் முடிந்த பொழுது உண்மையில் அங்கு ஒரு மக்கள்மயப்படுத்தப்பட்ட அரசியல் கட்டமைப்பு இருக்கவில்லை. விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்புத்தான் இருந்தது. அது ஒரு சில நபர்களைக் கொண்ட அமைப்பே தவிர, மக்கள் இயக்கம் அல்ல. இப்படித்தான் 15 ஆண்டுகளாக இலங்கையின் தமிழ் அரசியல் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இந்த முறை அந்தக் குமிழ் வெடித்துவிட்டது.” என்கிறார் அகிலன்.
மேலும், தமிழ் தேசிய அரசியல்வாதிகளுக்கான எதிர்ப்பு வாக்காகத்தான் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகள் விழுந்தன என்கிறார் அகிலன்.
ஆக, இனி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் தேசிய அரசியலின் எதிர்காலம் என்ன? தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவர் ஸ்ரீதரன் இதில் பெரும் நம்பிக்கையோடு இருக்கிறார். “ஒரு தமிழன் உயிரோடு இருக்கும் வரைக்கும் தங்கள் தேசிய விடுதலைக்காக தொடர்ந்து அவர்கள் பயணித்துக்கொண்டிருப்பார்கள்” என தெரிவித்தார் அவர். ஆனால், அவர்களுக்குப் பெரும் சவால்கள் காத்திருக்கின்றன என்கிறார் அகிலன் கதிர்காமர். “தற்போது அவர்கள் மிகவும் சிதறிப்போயிருக்கிறார்கள். தாங்கள் மீண்டும் ஒன்றாக இயங்க வேண்டும் என்ற கோஷங்கள் எழ ஆரம்பித்திருக்கின்றன. இந்த தமிழ் தேசிய அரசியல், மக்களின் நாளாந்தப் பிரச்னைகள், வறுமை, பாடசாலை விலகல், வேலையின்மை போன்றவற்றையெல்லாம் பிரச்சினையாக பார்க்கிறார்களா, அதற்கான தீர்வுகளை யோசிக்கப் போகிறார்களா என்ற கேள்வி இருக்கிறது. இந்தக் கேள்விகளைக் கையாளாவிட்டால் தமிழ் தேசிய அரசியல் கடினமாகத்தான் இருக்கும். மக்கள் ஒரு பெரும் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்” என்கிறார் அவர்.
முரளிதரன்
காசிவிஸ்வநாதன்