இலங்கையில் இரத்தம் சிந்தாமல் அமைதிப் புரட்சியொன்று ஏற்பட்டிருக்கின்றது. கடந்த செப்டெம்பர் மாதத்தில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அநுர குமார திசாநாயக்க வெற்றிவாகை சூடினார். அதனை முதலாவது அமைதிப் புரட்சி என்று குறிப்பிடலாம்.
அதனையடுத்து இம்மாதத்தில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் கட்சியான தேசிய மக்கள் கட்சி 159 ஆசனங்களைப் பெற்று மகத்தான வெற்றியை ஈட்டியிருக்கின்றது. அதாவது இவ்வெற்றியானது மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலான வெற்றியாகும். சுதந்திரத்துக்குப் பின்னரான அரசியல் வரலாற்றில் இதனை ஒரு சாதனையென்றே கொள்ளலாம்.
தேசிய மக்கள் சக்தியை தென்னிலங்கையின் பெரும்பான்மையினரான சிங்கள மக்கள் மாத்திரம் ஆதரிக்கவில்லை. வடக்கு, கிழக்கு, மலையகம் என்றெல்லாம் நாட்டின் அனைத்துப் பிரதேசங்களையும் சேர்ந்த மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆதரித்திருக்கின்றார்கள். வடக்கு, கிழக்கு, மலையகம் போன்ற பல பிரதேசங்களில் இருந்து தமிழர்கள் பலர் இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்.
அதேபோன்று பல இடங்களிலும் தேசிய மக்கள் சக்தியில் முஸ்லிம்களும் இத்தேர்தலில் வெற்றி பெற்றிருக்கின்றார்கள். தென்னிலங்கை அரசியல் கட்சியொன்றின் சார்பாக வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்தும் சிறுபான்மையினர் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதென்பது சாதாரணமான விடயமல்ல.
சிறுபான்மையினரது இம்முடிவுக்கு இருவிதமான காரணங்களை இங்கு குறிப்பிட முடியும். முதலாவது காரணம் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறுபான்மைக் கட்சிகள் மீதான அதிருப்தியும் வெறுப்பும் ஆகும். அந்த வெறுப்பின் காரணமாகவே சிறுபான்மை மக்களில் ஏராளமானோர் மாற்றுத் தெரிவுக்கு முன்வந்து தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்துள்ளனர்.
தமிழ், முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சிறுபான்மைக் கட்சிகள் தமது மக்களை முற்றாகவே மறந்த நிலையில், தங்களுக்குள்ளேயே முட்டிமோதிக் கொண்டன. மக்களின் குறைகள், தேவைகளை அக்கட்சிகள் நீண்ட காலமாக பொருட்படுத்தியதே கிடையாது. அக்கட்சிகளின் தலைவர்கள் தங்களுக்குள் முட்டிமோதிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்தனர்.
தங்களுக்கு வாக்களித்த மக்கள் வேடிக்கை பார்க்கும்படியாக சிறுபான்மைக் கட்சித் தலைவர்களுக்கிடையில் பகிரங்க மோதல்கள் தொடர்ந்தன. கட்சிகளுக்கு இடையே மாத்திரமன்றி, கட்சிக்கு உள்ளேயும் உட்கட்சி மோதல்கள் தொடர்ந்து வந்தன. வடக்கு, கிழக்கில் மாத்திரமன்றி மலையத்திலுள்ள சிறுபான்மைக் கட்சிகளின் நிலைமையும் இவ்வாறுதான் இருந்தது.
எனவேதான் சிறுபான்மை மக்கள் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சியின் மீது வெறுப்புக் கொண்டனர். அம்மக்களின் மனோநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்பட்டதைக் காண முடிந்தது.
சிறுபான்மை மக்களின் மனமாற்றத்துக்கான மற்றைய காரணம் அம்மக்கள் தேசிய மக்கள் சக்தி மீது கொண்டிருந்த நம்பிக்கை ஆகும். நாட்டின் பாரம்பரியக் கட்சிகள் நடத்திய ஆட்சியின் நன்மை தீமைகளை மக்கள் நெடுங்காலமாகவே கண்டு வந்துள்ளனர். ஆட்சிகள் மாறிமாறி வந்த போதிலும், நாட்டின் பொருளாதாரம் சற்றேனும் மீண்டெழுந்ததாக இல்லை.
ஊழல் மோசடி, அரசவளங்களின் வீண்விரயங்கள் என்றெல்லாம் குளறுபடிகள் தொடர்ந்தபடியே வந்தன. மக்களின் வரிப்பணத்தில் இருந்து அரசியல்வாதிகள் சுகபோக வாழ்க்கை வாழ்ந்தார்களே தவிர, மக்களின் துன்பதுயரங்கள் பற்றி அக்கறை கொண்டதில்லை.
அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அவர்களது குடும்பத்தினரும், நண்பர்களும் சுகபோக வாழ்க்கை நடத்தியது மக்களின் பணத்தில் இருந்துதான் என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்து கொள்ளவேயில்லை. நாடு பொருளாதார ரீதியில் அதலபாதாளத்துக்குச் சென்றதற்கு கடந்தகால ஆட்சியாளர்களே காரணமாக இருந்துள்ளனர் எனலாம்.
ஆட்சியாளர்களின் மீது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்த வேளையில் மக்களின் மாற்றுத் தெரிவு தேசிய மக்கள் சக்தியாகவே இருந்தது. தேசிய மக்கள் சக்தி முன்வைத்த கொள்கைத் திட்டங்கள் மீது மக்கள் ஈர்க்கப்பட்டனர். ஊழல் மோசடியற்ற, மக்களின் வரிப்பணத்தை விரயம் செய்யாத நேர்மையான ஆட்சியொன்றே மக்களின் தேவையாக இருந்தது.
மக்கள் தங்களது தேவையை இத்தேர்தலில் வெளிப்படுத்தியுள்ளனர். சிங்கள மக்கள் மாத்திரமன்றி, சிறுபான்மையின மக்களும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். போலித்தனம் இல்லாத, ஊழல் மோசடி இல்லாத, அரசவளங்களை அழிக்காத அரசாங்கமே தங்களுக்குத் தேவையென்று மக்கள் இத்தேர்தலில் தெளிவாகவே எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு பாரிய பொறுப்பொன்று சுமத்தப்பட்டிருக்கின்றது. மக்களின் அபிலாஷைகளை படிப்படியாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இப்போது உள்ளது.