ஒலிம்பிக்ஸ் மற்றும் பரா ஒலிம்பிக்ஸ் ஆகியவற்றுக்கான உத்தியோகபூர்வ காப்புறுதிக் கூட்டாளர் என்ற அலியான்ஸின் வகிபாகத்திற்கு அமைவாக, இலங்கையின் முன்னாள் மற்றும் நடப்பு தேசிய ஒலிம்பிக் வீரர்களுக்கு மருத்துவ காப்புறுதியை அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனம் வழங்கியுள்ளது.
4ஆவது ஆண்டாகவும் தொடரும் இந்த முயற்சியானது விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவளிக்கும் அலியான்ஸின் பரந்தளவிலான சர்வதேச அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் அரங்கில் கால்பதித்த தருணம் முதற்கொண்டு, வாழ்வில் அவர்கள் விளையாட்டுக்களிலிருந்து ஓய்வு பெற்றதற்கு பின்னும் இந்த ஆதரவு அவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. முழுமையான மருத்துவ காப்புறுதியை வழங்குவதன் மூலமாக இலங்கையில் விளையாட்டு வீரர்கள் தேசிய பெருமைக்கும், சர்வதேச விளையாட்டு சமூகத்திற்கும் ஆற்றுகின்ற பங்களிப்புக்களுக்கு அங்கீகாரமளித்து, அவர்களின் நலன் மீது தான் கொண்டுள்ள அர்ப்பணிப்பை அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.
2021ஆம் ஆண்டு முதல் 2028ஆம் ஆண்டு வரை ஒலிம்பிக்ஸ் மற்றும் பரா ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கான உலகளாவிய காப்புறுதிக் கூட்டாளர் என்ற ரீதியில், அலியான்ஸ் நிறுவனம் ஒலிம்பிக் வீரர்களை களத்திலும், களத்திற்கு வெளியிலும் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்கின்றது.