சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடன் ஒத்துழைப்பு தொடர்பான மூன்றாவது பணியாளர் மட்ட உத்தியோகபூர்வ ஒப்பந்தம் இன்று (23) கைச்சாத்திடப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் இது முக்கியமான முன்னெடுப்பாகும் என தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்பும் இதனுடனான உடன்பாடுகளில் அடங்குவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் என்றும் ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டார்.
10 வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பித்து உரையாற்றும் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்த தகவலை வெளியிட்டார்.
இது தொடர்பில் மேலும் தெளிவு படுத்திய ஜனாதிபதி;
நாம் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்தவுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பாட்டை எட்டியிருந்த ஆட்சியே கிடைக்கும் என்பதை கூறியிருந்தோம். அதனால், சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாட்டினை எட்டியுள்ள ஒரு நாட்டிற்கு அந்த ஒப்பந்தத்தை விடுத்து பயணிக்க முடியாது என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.
அதன்படி சர்வதேச நாணயநிதிய உடன்பாடுகளுக்கு அமைவாக பொருளாதாரத்தை கையாள்வதாக பொதுத் தேர்தலில் மக்களுக்கு உறுதியளித்தோம்.
அதற்கிணங்க பல செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறோம். மூன்றாவது மீளாய்வுக் கூட்டம் தாமதமாகியுள்ளது. இதனை செப்டெம்பர் மாதம் ஆரம்பிக்க வேண்டியிருந்தது.
மூன்றாவது மீளாய்வுக் கூட்டத்தை ஆரம்பிக்க சில காலம் பிடித்தது. பொதுத் தேர்தல் முடிந்த பின்னர் கடந்த (17) சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்தனர்.
கடன் மறுசீரமைப்பு குறித்து நீண்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. பணியாளர் மட்ட ஒப்பந்ததில் 23 ஆம் திகதி கைச்சாத்திட முடியும் என எதிர்பார்க்கிறோம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான பயணத்தில் அது முக்கியமான முன்னெடுப்பாகும். கடன் மறுசீரமைப்பும் அதனுடனான உடன்பாடுகளில் உள்ளடங்குகிறது. நாம் ஆட்சியை பொறுப்பேற்ற போது கடன்மறுசீரமைப்பு உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. வர்த்தக சந்தையில் பிணைமுறி தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன்னர் அதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாக ஊடகங்களின் ஊடாக அறிந்தோம். இருவருடங்களுக்கு மேலாக பேச்சுகள் நடைபெறுகிறது.
கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை நிறைவு செய்யாமல் பொருளாதாரத்தை முன்னெடுப்பது சிரமமானது.
கடன் மறுசீரமைப்பு பேச்சுக்களின் இறுதிக்கட்டமே, நாம் ஆட்சிக்கு வருகையில் காணப்பட்டது. அந்த முன்னெடுப்புகள் சாதகமானதா பாதகமானதா என தற்பொழுது விவாதிப்பதில் பயனில்லை. அது தான் யதார்த்தம். விரைவில் ஒவ்வொரு நாடுகளுடனும் தனித்தனியாக ஒப்பந்தங்களை மேற்கொள்ள இருக்கிறோம்.
வர்த்தகக் கடன் தொடர்பில் ஆரம்ப கட்ட உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதிக்குள் அந்த பணிகளை நிறைவு செய்ய முடியும் என நம்புகிறோம்.
சர்வதேச நாணய நிதியத்துடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாட்டை இவ்வருடத்திற்குள் வெற்றிகரமாக நிறைவுசெய்ய இயலுமாகும். பணியாளர் மட்ட உடன்பாடு இவ்வாரம் எட்டப்படுவதோடு பொருளாதாரத்தை நம்பகமான நிலைக்கு கட்டியெழுப்புவதற்கு அது பங்களிப்பாக அமையும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்