சினை பசுவொன்றை இறைச்சிக்காக வெட்டியுள்ள சம்பவமொன்று யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை சுருவில் பகுதியில், நேற்று (22) வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
உயர் ரக கேப்பை இனத்தைச் சேர்ந்த சினை பசுவொன்றை, ஆள் நடமாற்றம் இல்லாத இடத்துக்கு கடத்திச் சென்ற சந்தேகநபர்கள் சிலர், அப் பசுவை வெட்டி, வயிற்றினுள் இருந்த கன்றினை வெளியே வீசியுள்ளதுடன், பசுவினை இறைச்சிக்காக துண்டுகளாக வெட்டியுள்ளனர்.
இதனை அவதானித்த பிரதேச மக்கள், சந்தேகநபர்களை மடக்கிப்பிடிக்க முற்பட்டபோது, அவர்கள் தமது மோட்டார் சைக்கிள் மற்றும் இறைச்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக அம் மக்கள் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், மோட்டார் சைக்கிளையும், சுமார் 200 கிலோ எடையுடைய மாட்டிறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் தீவக பகுதிகளில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகவும் மாடுகளை இறைச்சிக்காக வெட்டும் சட்டவிரோத நடவடிக்கை அதிகரித்துள்ளமையினால் அதனை கட்டுப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(கரவெட்டி விசேட நிருபர்)