யாழ்ப்பாணத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக 610 குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.
இவை நேற்று முன்தினம் (21) மாலை வரை மட்டும் யாழ். மாவட்டத்தில் பதிவாகிய பாதிப்புக்கள் என மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, யாழ்.மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை இனங்கண்டு, அவற்றை அடையாளப்படுத்தி உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பிரதேச செயலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இடர்நிலை காரணமாக இடம்பெயர்ந்து தற்காலிக இடங்களில் தங்கியுள்ளோருக்கு தேவையான உலர், உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் மாவட்ட செயலர் ம.பிரதீபனால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, தென்மராட்சிப் பகுதியில் கடந்த 21 ஆம் திகதி முதல் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒரே நாளில் நீர் நிலைகள் நிரம்பி குடிமனைகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
(சாவகச்சேரி, யாழ். விசேட நிருபர்கள்)