வட மாகாணத்தில் எதிர்வரும் நாட்களில் இடர் பாதிப்புக்கள் ஏற்படுமானால் அவற்றை எதிர்கொள்வதற்குத் தயார் நிலையில் இருப்பதாக துறைசார் திணைக்களத் தலைவர்கள் வட மாகாண ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.
பருவகால மழை மற்றும் இடர்தணிப்பு முன்னாயத்தக் கூட்டம் வட மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்று (22) காலை நடைபெற்றபோது, கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்,
எதிர்வரும் நாட்களில் தாழமுக்கமொன்று வங்கக் கடலில் உருவாகலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. அதன் நகர்வுப் பாதை சரியாக இன்னமும் கணிக்கப்படவில்லை. எனினும், நாம் அதை எதிர்கொள்ளும் வகையில் ஆயத்தங்களுடன் இருக்கவேண்டும்.
பருவமழை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் – செப்டெம்பர் மாதத்துக்கு முன்னதாக, எமது பிரதேசத்திலுள்ள வாய்க்கால்கள் அனைத்தும் துப்புரவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
சில இடங்களில் வாய்க்கால்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். அவற்றை சட்ட ரீதியாக அணுகி உடனடியாக இடித்து அகற்றுங்கள். தேவையேற்படின், பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொள்ளுங்கள். ஒவ்வொரு திணைக்களங்களும் மற்றைய திணைக்களங்களை பார்த்துக்கொண்டிருக்காமல் உடனடியாக இப் பணிகளை செய்யவேண்டும்.
பல இடங்களில் வாய்க்கால்களுக்குள்ளும் வீதிகளிலும் மக்கள் குப்பைகளை வீசுகின்றார்கள். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்.
விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் மக்களின் மனங்களில் மாற்றம் ஏற்படாவிட்டால், சட்ட நடவடிக்கை எடுப்பதே ஒரே வழி என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, முல்லைத்தீவு மாவட்டத்தில் 5 வெள்ள அபாய இடர் பிரதேசங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், முல்லைத்தீவு மாவட்டச் செயலர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாண மாவட்டத்திலும் இடரை எதிர்கொள்வதற்கு தயாரான நிலையில் இருப்பதாக மேலதிக மாவட்டச் செயலாளர் இதன்போது, தெரிவித்தார். நீர்ப்பாசன திணைக்களத்தின் பணிப்பாளர் கூறுகையில்,
யாழ். மாவட்டத்தில், எதிர்வரும் நாட்களில் கடும் மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளமையினால் அதனை கருத்திற்கொண்டு உப்பாறு மற்றும் தொண்டைமானாறு நன்னீரேரிகளினதும் வழுக்கையாறினதும் வெள்ள நீரை கடலுக்கு வெளியேற்றும் தடுப்பணை கதவுகள் இம்முறை முன்னதாகவே திறக்கப்பட்டுள்ளன.
மேலும், கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 18.3 அடியாக உள்ளது. 350 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவானால் 30 அடி வரையில் நீர் மட்டம் உயர்வடையக்கூடும். இருப்பினும், நீர் வெளியேற்றும் பிரதேசத்துக்கு வாய்க்கால்களை அண்மித்து உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது என அவர் தெரிவித்தார்.
இதனிடையே, இடர் நிலைமை ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ளக்கூடிய வகையில், இரவிலும் பணியாற்றுவதற்கு பணியாளர்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாநகர சபையின் சார்பாக பங்கேற்ற பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில், எதிர்வரும் இடர் நிலைமைகளின்போது, பொதுமக்கள் இடர்முகாமைத்துவப் பிரிவின் 117 என்ற இலக்கத்துக்கு தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாவட்டத்தில் 021 222 1676, 077 395 7894 என்ற இலக்கங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 021 228 5330, 077 232 0528 என்ற இலக்கங்களுக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 021 229 0054 என்ற இலக்கத்துக்கும், மன்னார் மாவட்டத்தில் 023 211 7117 என்ற இலக்கத்துக்கும், வவுனியா மாவட்டத்தில் 076 099 4883 என்ற இலக்கத்துக்கும் தொடர்புகொள்ள முடியும் என இக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.