இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து தேசிய ரீதியிலான அல்குர்ஆன் மனனப் போட்டியை நடத்தவுள்ளது.
இரண்டாவது தடவைாயக இப்போட்டி நடத்தப்படவுள்ள தாக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தெரிவித்தார்.
எதிர்வரும் 2025 ஜனவரி மாதமளவில் கொழும்பில் இப்போட்டியை, நடாத்துவதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இப்போட்டிகள், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள், ஹிப்ழுல் குர்ஆன் மத்ரஸாக்கள் மற்றும் அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் ஆகியவற்றை மையப்படுத்தி நடைபெறும்.
ஆண், பெண் இருபாலாருக்கும் நான்கு பிரிவுகளாக நடாத்தப்படும் இப்போட்டியில், ஒவ்வொரு பிரிவிலும் வெற்றிபெறும் போட்டியாளர்கள் சவூதி அரசினால் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்படுவர்.
மேற்படி போட்டியில் பங்குபற்றுவதற்குத் தகுதியான போட்டியாளர்களை தெரிவு செய்யும் ஆரம்பக்கட்டப் போட்டி 2024 டிசம்பரில், பிராந்திய ரீதியாக நடாத்தப்படத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
(எம்.எஸ்.எம்.ஸாகிர்)