உக்ரைன் நாட்டின் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையைப் பயன்படுத்தி ரஷ்யா முதன் முறையதாகத் தாக்குதல்
நடாத்தியுள்ளது.
ரஷ்யாவின் அஷ்ட்ராகன் பகுதியிலிருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது என்று உக்ரைன் விமானப் படை டெலிகிராம் செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளதோடு தாக்குதலையும் உறுதி செய்துள்ளது.
அமெரிக்க, பிரித்தானிய ஏவுகணைகளைப் பயன்படுத்தி உக்ரைன் ரஷ்ய எல்லைக்குள் முதன் முறையாக தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாகவே ரஷ்யா இந்த ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஐ.சி.பி.எம் (ICBM) ரக ஏவுகணைகள் அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று தாக்குதல் நடத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இந்நிலையில், இந்த ரக ஏவுகணைகளை ரஷ்யா பயன்படுத்தியுள்ளமை போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் 2022 இல் தொடங்கியது. அன்றிலிருந்து ஆயிரம் நாட்கள் கடந்த பின்னரே இத்தகைய ஏவுகணையைப் பயன்படுத்தி உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடாத்தியுள்ளது.
இந்நிலையில் ரஷ்யா- – உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ளது. அதனால் அமெரிக்கா கீவ் நகரிலுள்ள தூதரகத்தை மூடியதைத் தொடர்ந்து ஸ்பெய்ன், இத்தாலி, கிறீஸ் போன்ற நாடுகளும் தங்கள் தூதரகங்களை மூடியுள்ளன.