தென்மேற்கு ஐஸ்லாந்தில் உள்ள ரெய்க்ஜேன்ஸ் தீபகற்ப பகுதியில் உள்ள எரிமலை ஏழாவது முறையாக நேற்று முன்தினமிரவு வெடித்துச் சிதறியுள்ளது.
ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு மையத்தின் தகவலின் படி, எரிமலையானது நேற்று முன்தினம் மாலை வெடிக்கத் தொடங்கி இரவு 11.14 மணியாகும் போது சுமார் 3 கிலோ மீற்றர் (1.8 மைல்) நீளமுள்ள பிளவை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெடித்ததை விட இது கணிசமாக குறைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எரிமலை வெடிப்பால் விமானப் போக்குவரத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கிரிண்டாவிக் நகரம் உட்பட தீபகற்பத்தின் சில பகுதிகளில் எரிவாயு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தலைநகர் ரெய்க்ஜாவிக்கின் தென்மேற்கே 50 கிலோ மீற்றர் (30 மைல்) தொலைவில் வசிக்கும் சுமார் 3,800 மக்கள் மீண்டும் மீண்டும் ஏற்படும் எரிமலை வெடிப்புகளால் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டு அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த எரிமலை கடந்த டிசம்பர் மாதம் முதலான ஒரு வருட காலத்திற்குள் ஐஸ்லாந்தில் ஏழாவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக்கின் மேலே அமைந்திருக்கும் ஐஸ்லாந்து எரிமலை சராசரியாக நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கிறது. கடந்த 2010ல் எரிமலை வெடித்ததில், பல மாதங்களுக்கு விமானப் பயணங்கள் பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.