போர் குற்றம் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அவரது முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இதன்போது ஹமாஸ் ஆயுதப் பிரிவுத் தலைவர் முஹமது தெயிப் மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காசாவில் ஏற்பட்டுள்ள பட்டினி நிலைமை மற்றும் பலஸ்தீனர்களுக்கு எதிரான துன்புறுத்தல் குற்றங்களுக்கு நெதன்யாகு மற்றும் கல்லன் பொறுப்பாக உள்ளனர் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாக நேற்று (21) இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் போரைத் தூண்டிய 2023 ஒக்டேபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதல் தொடர்பிலேயே முஹமது தெயிப் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் ஏற்கனவே மரணித்துவிட்டதாக கூறப்படும் செய்தி குறித்து தகவல்களை சேகரித்து வருவதாக வழக்குத்தொடுநர் குறிப்பிட்டுள்ளார். தெயிப் படுகொலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் கூறுகின்றபோதும் ஹமாஸ் தரப்பு இதனை உறுதி செய்யவில்லை.
முன்னதாக கடந்த மே மாதம் நெதன்யாகு, கல்லன், தெயிப் மற்றும் மேலும் இரு ஹமாஸ் தலைவர்களான தற்போது இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டிருக்கும் இஸ்மைல் ஹனியே மற்றும் யஹ்யா சின்வார் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத்தொடுநர் கரீம் கான் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹேகை தளமாகக் கொண்ட இந்த நீதிமன்றத்தின் உத்தரவை இஸ்ரேல் நிராகரித்திருப்பதோடு காசாவில் போர் குற்றங்கள் இடம்பெற்றதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் அது மறுத்துள்ளது.
எவ்வாறாயினும் இந்தப் பிடியாணையை செயற்படுத்துவதற்கு குற்றவியல் நீதிமன்றத்திடம் சொந்தமான பொலிஸ் படை இல்லாத நிலையில் இதனை செயற்படுத்துவதில் அது தனது உறுப்பு நாடுகளிலேயே தங்கியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடம்பெறாதபோதும் அதில் 124 உறுப்பு நாடுகள் உள்ளன. இதில் அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், பிரிட்டன், ஜப்பான், பிரேசில், அவுஸ்திரேலியா, கனடா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய நாடுகள் அடங்கும். இந்த பிடியாணையை செயற்படுத்துவது உறுப்பு நாடுகளிலேயே தங்கியுள்ளது.
எவ்வாறாயினும் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக நீடிக்கும் இந்த இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 44,000ஐ தாண்டியுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 71 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 176 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு நேற்று அறிவித்தது. இதன்மூலம் அங்கு கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 44,056 ஆக உயர்ந்ததோடு 104,268 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் வடக்கு காசாவின் கமால் அத்வான் மருத்துவமனைக்கு அருகில் உள்ள ஒட்டுமொத்த குடியிருப்பு தொகுதி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் 66 பேர் கொல்லப்பட்டு 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.
இதன்போது பல வீடுகளும் தரைமட்டமாக்கப்பட்டிருப்பதோடு மேலும் பல வீடுகள் சேதத்திற்கு உள்ளாகியிருப்பதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் தலைநகர் பெய்ரூட்டின் தெற்கு புறநகரில் நேற்றும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
இதேநேரம் லெபனானில் இருந்து வடக்கு இஸ்ரேலின் கலீலி மீது நேற்று இடம்பெற்ற ஏவுகணை தாக்குதலில் 30 வயது ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.