Sunday, November 24, 2024
Home » மனசாட்சியும் அன்பும் கொண்ட வாழ்க்ைகதான் நிம்மதியை தரும்

மனசாட்சியும் அன்பும் கொண்ட வாழ்க்ைகதான் நிம்மதியை தரும்

பகவான் சத்யசாயி பாபாவின் ஜனன தினம் நாளை

by sachintha
November 22, 2024 5:52 am 0 comment

உலக மக்கள் வாழ்க்கையை வளம்படுத்த அவதாரம் செய்தவர் பகவான் பாபா. தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் அனந்தபூர் மாவட்டத்தில் புட்டபர்த்தி என்ற கிராமத்தில் 1926 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பகவான் அவதரித்தார். ‘சத்திய நாராயணன் என்ற நாமம் சூட்டப்பட்ட ஸ்ரீ சத்ய சாயி பாபா தனது 14 வயதில் (1940ஆம் ஆண்டு) ‘தானே சாயி பாபா’ என்று அறிவித்து ஆன்மீக மறுமலர்ச்சிப்பணியில் ஈடுபட ஆரம்பித்தார்.

அன்பின்னர் அருள் வடிவமான பாபா, ‘வாழ்க்கை என்பது கடல், அதில் சுகமும் துக்கமும் அலைகள். ஆன்மீகமானது சம்சார சாகரத்தில் பயணிப்பவர்களுக்கு கலங்கரை விளக்காக அமைந்து கரையேற்றுகின்றது. எனவே அன்பினால் இதயத்தை நிரப்பி ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கநெறிக்குட்பட்ட வாழ்க்ைக வாழ வேண்டும்’ என்றார்.

அநேகத்துவத்தில் ஏகத்துவத்தை’ காண்பதுதான் ஆன்மீகம். ‘லோகா ஸமஸ்தா

ஸுகினோ பவந்து’ என உலகம் முழுவதும் நலமாய் இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை அனைவரும் பின்பற்றி வாழ்ந்தால் சாந்தி, சமாதானம், அமைதி நிலவும்’ என்று பகவான் கூறினார்.

‘இறைவன் எல்லா உயிர்களிலும் உறைகின்றார். பகவானின் பிரேமை தத்துவத்தை எவரும் புரிந்து கொள்ள முயற்சிப்பதில்லை. அன்பின்றி வாழ்க்கை ஏது? அன்பே தெய்வம். இந்த களங்கமற்ற அன்பினால் ஆனந்தத்தை அனுவிக்க முடியும். ஆனால் மனிதனோ ஆசைகளின் மூட்டையாகவும், காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்ற ஆறு உட்பகைகளுக்கும் அடிமையாகி ஆனந்தத்தை வேறு வகையில் அனுபவிக்க முற்பட்டு துன்பக்கடலில் துவண்டு போய் அமைதி தேடி அலைகின்றான். உண்மை, நீதி, நேர்மை, நியாயம் ஆகிய நன்னெறிகளைக் கடைப்பிடிக்காது மனிதன் மிருகங்களாக வாழும் நிலையில், அதர்மம் தலைதூக்கி அமைதியற்ற தன்மை ஏற்படுகின்றது.

எனவே, இந்நிலை அறவே இல்லாது ஒழிக்கப்பட வேண்டுமாயின் மனிதன் ஆன்மீக வழியை நாட வேண்டும். அதற்கு பேராசான் பகவான் பாபா வகுத்த மனித மேம்பாடுகளான சத்யம், தர்மம், சாந்தி, பிரேமை, அகிம்சை, தயை, சாந்தம், ஞானம், மன்னிக்கும் தன்மை, இரக்கம் ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து வாழ அங்கே அமைதி பிறந்து ஆனந்தம் உருவாகிறது. பகவான் பாபா ‘எனது வாழ்க்கையே நான் தரும் செய்தி’ என்று கூறி மனித வாழ்க்கை தெய்வீகமயமாய் அமைய வேண்டும் என்ற நோக்கில் அவர்கள் வாழ்க்கையை மேன்மைப்படுத்த அரும்பாடுபட்டார்.

மனம் குரங்கு போன்றது எந்நேரமும் குரங்கு மரத்துக்கு மரம் தாவுவது போல அலைபாய்ந்த

வண்ணமேயிருக்கும். உடம்பு நீர்க்குமிழி தோன்றி மறைவது போல நிரந்தரமற்றது. ஆகவே நாம் எம் மனச்சாட்சியை பின்பற்ற வேண்டும். மனச்சாட்சியானது எது சரி, எது பிழை என்பதை தீர்மானிக்கும். மனச்சாட்சி என்ற தலைவனை பின்பற்றும் போது தீயகுணங்கள் உள்நுழையாமல் பார்த்துக் கொள்ளலாம். அன்பை வளர்த்து வாழ்க்கையில் வெற்றியடைய முடியும். சமுதாயத்தில் நல்ல தலைவனாக நல்ல பிரஜையாக வாழ இம்மனச்சாட்சி ஏணிப்படியாக அமையும்.

இன்றைய உலகில் தர்மம் தழைத்தோங்க வேண்டுமாயின் விழுமியங்கள் நிறைந்த பகவானின் இச்செய்தியை மக்கள் நன்கு புரிந்து, தெரிந்து தெளிவாகி அதன்படி வாழக்கற்றுக் கொள்ளல் மிகவும் அவசியம். பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா ஒரு நல்ல வைத்தியர், நல்ல சேவகர், நல்ல ஆன்மீகப் பேராசான்,

புட்டபர்த்தியிலும் சுற்றுப்புறத்திலும் வெண்வயலிலும் உயர்ந்த வைத்தியசாலைகள், பாடசாலைகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், விஞ்ஞான கலாசார மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு இலவசமான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1953 இல் இருந்து தொடர்ச்சியாக பகவான் ஆற்றிய உரைகள் 42 பாகங்களாக அதாவது ‘ஸ்ரீ சத்ய சாயி அருளமுதம்’ எனப் பெயர் தாங்கி புத்தக வடிவில் வெளிவந்துள்ளன.

இறுவட்டுக்கள் உட்பட தற்கால தொழில்நுட்பத்துக்கமைய இணையத்தில் பதிவுகள் புதிய வடிவில்

வெளிவந்து கொண்டிருக்கின்றன. கல்வி ஒரு வியாபாரமாக அமையக் கூடாது என்பதற்காக அதில் அதிக கவனம் செலுத்தி ஆரம்பக் கல்வி முதல், பேராசிரியர் பட்டம் வரை இலவசக் கல்வி வழங்கும் நிறுவனங்களை நிறுவியுள்ளார். பெண்களின் கல்வியிலும் தனிக்கவனம் செலுத்தி நல்லொழுக்கமுடைய பெண்கள் உலகுக்குத் தேவையென்று வலியுறுத்தினார்.

பிரசாந்தி நிலையத்தில் அடிக்கடி ஆசிரியர்கள் மாநாடு, இளைஞர்கள் மாநாடுகளையும் கருத்தரங்குகளையும் நடத்தி இனம், மத, மொழி, நிறம் என்பவற்றுக்கு அப்பாற்பட்டு எல்லோரையும் உலகளாவிய ரீதியில் இணைத்து ஒற்றுமையை நிலைநாட்டினார். அறிவுரை கூறி எம்மையெல்லாம் வழிநடத்திய பகவான் பாபா 2011 ஏப்ரல் 24 ஆம் திகதி மகாசமாதியடைந்த நிலையிலும் சூக்கும வடிவில் என்றும் அருள் புரிகின்றார் என்பது பக்தர்களின் நம்பிக்ைக ஆகும். இதனால் இன்றும் புட்டபர்த்தியை நாடி பக்தர்கள் சென்று சமாதியை தரிசித்த வண்ணமே உள்ளனர். எனவே பகவானிடம் எம்மைப் பூரணமாக அர்ப்பணித்து, அவரது சங்கல்பத்தினாலேயே எல்லாம் நடக்கின்றது என்று பகவானை பிரார்த்தித்து சாந்தி பெறுவோமாக!

ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் ஜெயந்தி தின நிகழ்வுகள்

பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் 99 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நவம்பர் 23ஆம் திகதி சனிக்கிழமை காலை 5.00 – 8.30 மணி வரை கொழும்பு 07, பார்ன்ஸ் பிளேஸிலுள்ள சாயி மந்திரில் விசேட நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், கொழும்பு 06, வெள்ளவத்தை, சைவ மங்கையர் வித்தியாலயம் சிவானந்த நிலையத்தில் காலை 5.00 – 6.00 மணி வரையும், காலை 10.30 – 12.00 மணிவரையும் இரு நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

மேலும், மாலை 5.00 – 8.30 மணி வரை கொழும்பு 04, பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் ஆன்மீக மற்றும் கலை நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

 

திருமதி லீலாவதி மோகனசுந்தரம் ஸ்ரீ சத்யசாயி குளோபல் கவுன்சில் இலங்கை

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT