பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று காலை 10.00 மணிக்கு வைபவ ரீதியாக இடம்பெற்றது. இந்த அமர்வின் ஆரம்ப நிகழ்வாக சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு தெரிவு இடம்பெற்றன.
நடந்து முடிந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெற்று தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்துள்ளது. சுதந்திரத்திற்கு பின்னர் ஆட்சி அதிகாரம் இரண்டு கட்சிகளிடம் தான் மாறி மாறி சென்ற வண்ணம் இருந்தன. இருந்தும் அந்த இரண்டு தரப்பினரும் முன்னெடுத்த கொள்கைகளும் வேலைத்திட்டங்களும் நாட்டில் சுபீட்சத்தையோ மக்களுக்கு விமோசனத்தையோ பெற்றுக்கொடுக்கவில்லை. நாடும் மக்களும் தொடர்ந்தும் பின்னடைவுக்கு உள்ளாகினர். இதற்கு கடந்த கால ஆட்சியாளர்கள் முன்னெடுத்த கொள்கைகளும் வேலைத்திட்டங்களுமே அடிப்படைக் காரணமாக அமைந்திருந்தன.
இந்நிலையில் தான் நாட்டு மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் பாரம்பரிய இரண்டு அரசியல் கட்சிகளையும் நிராகரித்து தேசிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றியைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றனர். இது பாரிய எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் பெற்றுக் கொடுக்கப்பட்டிருக்கும் வெற்றியாகும்.
அந்த வகையில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத் தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றும் உரை குறித்து மக்கள் மத்தியில் பாரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த எதிர்பார்ப்புக்கு அமைய அந்த உரை அமைந்திருந்தது என்பதே மக்களின் கருத்தாகும்.
பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இவ்வளவு காலமும் இனங்கள், மதங்கள் என்ற அடிப்படையிலேயே அரசியல் கட்சிகள் உருவாகின. அதன் விளைாக மக்கள் மத்தியில் பிரிவினை, சந்தேகம், இனவாதம் என்பன வலுவடைந்தன. ஒரு தரப்பில் இனவாதம் வலுவடையும் வேளையில் அதற்கு எதிராக மாற்றுத் தரப்பிலும் இனவாதம் வலுப்பெறும் நிலை காணப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் ஒரிருவர் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கான துரும்பு சீட்டாகக்கூட இனவாதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர்.
ஒரே நாட்டில் வாழும் மக்களை இன ரீதியாகப் பிரித்து வைத்து அரசியல் செய்யும் கலாசாரம் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. இதன் ஊடாக மக்கள் மத்தியில் சந்தேசகங்களும் ஐயங்களும் ஆழமாக வேரூன்றி இருந்தன. ஆனால் இத்தகைய இனவாத அரசியல் முறைமையை மக்கள் பெரும்பாலும் வெறுக்கக் கூடியவர்களாகவே இருந்தனர்.
இந்நிலையில் தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத்தேர்தலிலும் மக்கள் இனவாத, மதவாத அரசியல் நிகழ்ச்சி நிரலை புறமொதுக்கி தேசிய மக்கள் சக்திக்கு பாரிய வெற்றியைப் பெற்றுக் கொடுத்தனர். தேசிய மக்கள் சக்தியின் இவ்வெற்றியில் சிங்களம், தமிழ், முஸ்லிம் மக்களும் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு என எல்லா மக்களும் ஒன்றாகப் பங்காளர்களாகியுள்ளனர். பாரிய எதிர்பார்ப்புடன் தேசிய மக்கள் சக்தியை மக்கள் ஆட்சி பீடமேற்றியுள்ளனர். அந்த வகையில் பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ஆற்றும் முதலாவது உரை மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.
அந்த எதிர்பார்ப்புக்கு அமைய ஜனாதிபதியின் உரை அமைந்திருந்தது.
ஜனாதிபதி தமதுஉரையின் போது, இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு இடமில்லை. எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும் இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பை கண்டிருக்கிறோம். ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவருக்கு இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வளர்ச்சியடைந்துள்ளன. ஆனால் இனி எவரும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நாட்டு மக்களின் முக்கிய எதிர்பார்ப்புக்களில் இதுவும் ஒன்றாகும். ஒரு நாட்டின் சுபீட்சத்துக்கும் அபிவிருத்திக்கும் இனவாதம் ஒரு போதும் பயனளிக்காது. இதற்கு கடந்த கால வரலாறு நல்ல சான்றாகும். இந்நாட்டின் பின்னடைவுக்கு இனவாதம் பாரிய பங்களிப்பை அளித்துள்ளது. அதனால் இனியும் இந்நாடு பின்னடைவுக்கு உள்ளாக இடமளிக்கலாகாது. அதுவே மக்களின் வேணவாக உள்ளது. எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாக இருந்து வரும் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பும் தற்போது உருவாகியுள்ளது. அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வது மக்களின் பொறுப்பாகும்.