பாராளுமன்ற அமர்வுகளில் முன்மாதிரியாகவும் ஒழுக்கத்துடனும் செயற்பட வேண்டுமென, புதிய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல பாராளுமன்ற உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டார்.
மக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை, மிகவும் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படப் போவதாகவும் அவர் தெரிவித்தார். 10 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று கூடிய நிலையில், புதிய சபாநாயகராக அசோக சபுமல் ரன்வல ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார். இதற்கு நன்றி கூறி அவர் சபையில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர், பாராளுமன்றத்தின் சபாநாயகராக என்னை தெரிவு செய்துள்ளமைக்கு அனைவருக்கும் உளப்பூர்வமான நன்றியையும், கௌரவத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சித் தலைவர்களின் வாழ்த்து செய்திகளை, ஏற்றுக் கொள்வதுடன் அதற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நாட்டின் அதியுயர் இடம் என்ற ரீதியில் பாராளுமன்றம் தனது சுதந்திரத்தையும் கௌரவத்தையும் பாதுகாப்பதற்குத் தேவையான சேவைகளையும் ஆற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளது .
பாராளுமன்றத்தின் மரபுகள் மற்றும் நடைமுறைகளின்படி,முன்னுதாரணமான பாராளுமன்றத்தை உருவாக்குதற்கு நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன். இதற்கு அனைத்துக் கட்சிகளினதும் ஆதரவு அவசியமாகும்.
நாட்டுமக்கள் எதிர்பார்க்கும் புதிய அரசியல் கலாசாரத்துடன் கூடிய பாராளுமன்றத்தின் செயற்பாடுகளை மிகவும் திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு என்னை அர்ப்பணிப்பதுடன் பாராளுமன்றக் குழு பொறிமுறையை மேலும் முறைப்படுத்துவதற்கு அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றேன் என்றும் அவர் தெரிவித்தார்.
புதிய சபாநாயகராக தெரிவுசெய்யப்பட்டுள்ள அசோக சப்புமல் ரன்வல,கடந்த பொதுத் தேர்தலில் தேசியமக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி கம்பஹா மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டார்.
மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினராக அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய அவர், தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.இவர் பியகம யதிஹேன ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், கம்பஹா ஹேனேகம மத்திய கல்லூரியில் உயர் கல்வியையும் பெற்றுக்கொண்டார். மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியல் பட்டதாரியான புதிய சபாநாயகர், ஜப்பானில் வசேடா பல்கலைக்கழகத்தில் உயிரியல் இரசாயன கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்