இந்தியாவுக்குரிய 1400 இக்கும் மேற்பட்ட புராதன சின்னங்களை அமெரிக்கா திருப்பி கையளித்துள்ளது.
குற்றவியல் கடத்தல் வலையமைப்புகள் ஊடாக கடத்தப்பட்ட இச்சின்னங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னெடுக்கப்பட்ட புலன் விசாரணைகளின் ஊடாக மீட்கப்பட்டதாக மன்ஹாட்டன் மாவட்ட சட்ட அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிகாரிகள் இச்சின்னங்களை வைபவ ரீதியாக இந்தியாவிடம் கையளித்துள்ளனர்.
நிவ்யோர்க்கிற்கான இந்தியாவின் கொன்சியூலர் ஜெனரல் மனீஸ் குல்காரியிடம் நிவ்யோர்க் கலாசார சொத்து, கலை மற்றும் பழங்கால பொருட்கள் குறித்த குழுவின் உள்நாட்டு பாதுகாப்பு புலனாய்வு மேற்பார்வையாளர் அலெக்ஸாண்ட்ரா டிஆர்மாஸ் இச்சின்னங்களை கையளித்துள்ளார். இச்சின்னங்கள் பத்து மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியானவை என்று அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அல்வின் எல். பிராக், ஜூனியர், ‘இந்திய கலாசார பாரம்பரியத்தை குறிவைத்துள்ள கடத்தல் வலையமைப்புகள் குறித்து நாங்கள் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளோம்’ என்றுள்ளார்.