கிழக்கு ஆபிரிக்க நாடான சோமாலிலேண்ட் குடியரசின் ஜனாதிபதியாக எதிர்க்கட்சித் தலைவர் அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
சோமாலிலேண்ட் தேசிய தேர்தல் ஆணைக்குழு இவரது வெற்றியை உறுதிப்படுத்தியுள்ளது. அதேநேரம் சோமாலிலேண்ட்டின் தற்போதைய ஜனாதிபதி முஸே பிஹி அப்டி (குல்மியே கட்சி) இத்தேர்தலில் சுமார் 35 சதவீத வாக்குகளை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்துள்ளார் என்றும் தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
சோமாலியாவின் பிரிவினைப் பகுதியாகவுள்ள சோமாலிலேண்ட்டின் ஜனாதிபதித் தேர்தல் கடந்த வாரம் நடைபெற்றதோடு நேற்று முன்தினம் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டது.
இதன் ஊடாக எதிர்க்கட்சித் தலைவரான இர்ரோ என்றழைக்கப்படும் வாடானி கட்சித் தலைவரான அப்திரஹ்மான் முகமது அப்துல்லாஹி 60 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.
இந்தத் தேர்தல் இரு வருடங்களுக்கு முன் நடாத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அரசின் நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட பிற காரணங்களுக்காக தேர்தல் நடத்தப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில், கடந்த வாரம் தேர்தல் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.