பிரேசில் ஜனாதிபதி லுலா டி சில்வாவை படுகொலை செய்து ஆட்சியைக் கவிழ்க்க சதி திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் பேரில் ஐந்து இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் இச்சதி திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதோடு ஜனாதிபதி டி சில்வா, உப ஜனாதிபதி ஜெரால்டோ அல்க்மின் மற்றும உயர் நீதிமன்ற நீதியரசர் அலெக்சாண்ட்ரே டி மோரேஸ் ஆகியோரை படுகொலை திட்டம் தீட்டப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.
பிரேசிலில் 2022 ஒக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் தீவிர வலதுசாரி ஜனாதிபதி ஜெயிர் போல்சனரோவை தோற்கடித்து, இடதுசாரி வேட்பாளரான லுலா டி சில்வா வெற்றிப் பெற்றதோடு அவர் தலைமையில் புதிய அரசும் அமைந்தது.
இந்நிலையில் தான் 2022 நவம்பர்-டிசம்பர் காலக்கட்டத்தில் அதிபர் லுலா டி சில்வா தலைமையிலான அரசை கவிழ்க்க பெரும் சதி நடந்ததுள்ளது.
இராணுவத்தின் சிறப்பு படையில் பயிற்சி பெற்ற இராணுவ வீரர்கள், ஓய்வு பெற்ற சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் இச்சதித்திட்டத்தில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.