பாகிஸ்தானில் நடைபெறும் கட்புலனற்றோர் டி20 உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து இந்திய அணி விலகியுள்ளது.
பாகிஸ்தான் செல்வதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி அளிக்காததை அடுத்தே தொடரில் இருந்து வெளியேறியதாக இந்தியாவின் கட்புலனற்றோருக்கான கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
நாளை (22) ஆரம்பமாகும் இந்த உலகக் கிண்ணப் போட்டி எதிர்வரும் டிசம்பர் 3 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க இந்திய அணி பஞ்சாப் மாநிலம் வாகா எல்லை வழியாக பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டு இருந்தது.
எனினும் பாதுகாப்பை காரணம் காட்டி இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. ஏற்கனவே ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்காக இந்திய அணி பாகிஸ்தான் பயணிப்பதற்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி விலகினாலும் கட்புலனற்றோர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று பாகிஸ்தான் கட்புலனற்றோர் கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது.
இந்தியாவில் நடத்தப்பட்ட முதல் மூன்று கட்புலனற்றோர் டி20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. முதல் இரு தொடர்களிலும் அது பாகிஸ்தான் அணியை வீழ்த்தியே கிண்ணத்தை வென்றதோடு கடைசியாக நடந்த தொடரில் பங்களாதேஷை தோற்கடித்தது.